டெல்லியின் தெற்கு பகுதியில் வீடுகளில் பீட்ஸா டெலிவரி செய்த நபருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனையடுத்து, அவரிடம் பீட்சா வாங்கிய 72 வீடுகளில் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலேயே இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. 

சீனாவின் பிறப்பிடமான கொரோனா வைரஸ் அழையா விருந்தளியாக 200க்கும் மேற்பட்ட நாடுகளில் அடியெடுத்து வைத்து பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. ஏழை, பணக்கார நாடுகள் என்ற பாரபட்சம் இல்லாமல் மனித குலத்திற்கு எதிராக வந்து நிற்கிறது. கண்ணுக்கு தெரியாத அந்த நுண்ணுயிரிடமிருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர்.


மேலும், இந்தியாவில் நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த வேண்டும் என்பதால் 2வது முறையாக மே 3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்ரா முதலிடத்திலும், 2வது இடத்தில் டெல்லியும் இருந்து வருகிறது.  டெல்லியில் 1,578 பேருக்கு கொரோனா தொற்று உள்ளது. இதுவரை 32 பேர் உயிரிழந்துள்ளனர். ஊரடங்கு அமலில் இருந்தாலும், உணவு பார்சல்களை விநியோகிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. 


இந்நிலையில், தெற்கு டெல்லி பகுதியில் மால்வியா நகரைச் சேர்ந்த பிரபல பீட்சா நிறுவனம், சோமேட்டோ மூலம் பீட்சாக்களை அப்பகுதியில் டெலிவெரி செய்து வந்துள்ளது. அதில் வேலைப் பார்த்த ஒரு டெலிவெரி நபருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. விசாரணையில், அவர் 72 குடும்பங்களுக்கு அப்பகுதியில் பீட்சா டெலிவெரி செய்துள்ளது தெரியவந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர்கள் அனைவரையும் சுய தனிமைப்படுத்திக் கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.