சந்திரயான்3 அனுப்பும் புகைப்படங்கள் தெளிவாக இல்லை: இஸ்ரோ தலைவர்!
சந்திரயான்3 அனுப்பும் புகைப்படங்கள் தெளிவாக இல்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார்

சந்திரயான்-3 விண்கலத்தின் லேண்டர், நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. தொடர்ந்து, விக்ரம் லேண்டரில் இருந்து பிரக்யான் ரோவர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி தனது ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது. பிரக்யான் ரோவர் அனுப்பும் தகவல்கள், புகைப்படங்கள், வீடியோக்களை இஸ்ரோ தொடர்ந்து பதிவிட்டு வருகிறது.
இந்த நிலையில், சந்திரயான்3 அனுப்பும் புகைப்படங்கள் தெளிவாக இல்லை என இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறியுள்ளார். கேரள மாநிலம் வெங்கனூரில் உள்ள பௌர்ணமிகாவு-பத்ரகாளி கோயிலில் சுவாமி தரிசனம் செய்த இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வளிமண்டலம் மற்றும் சூரிய ஒளியின் பற்றாக்குறை காரணமாகவும், நிலவில் உள்ள நிழல்கள் இருண்டதாக இருப்பதாலும் சந்திரயானில் இருந்து அனுப்பப்பட்ட படங்கள் தெளிவற்றவையாக உள்ளன என தெரிவித்தார்.
ஒழுங்கற்ற நிலப்பரப்பு மற்றும் சூரிய ஒளியின் பற்றாக்குறை காரணமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறக்கம் என்பது எப்போதும் சவாலான ஒன்றாக இருக்கும். இருப்பினும், இப்பகுதி விஞ்ஞானிகளை எப்போதும் கவர்ந்தே வந்துள்ளது. ஏனெனில் இந்த பகுதி முற்றிலும் ஆராயப்படவில்லை என்று சோம்நாத் தெரிவித்துள்ளார்.
“தரையிறங்குவதற்கு ஒரு தட்டையான மேற்பரப்பைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். சூரிய ஒளி 14 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். ஆனால் அந்த பகுதியில் கனிமங்கள் மற்றும் தண்ணீரைக் கண்டுபிடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.” என்று அவர் கூறினார்.
மும்பை INDIA கூட்டனிக் கட்சிகள் கூட்டம்: புதிய லோகோ, தொகுதி பங்கீடு முக்கிய அஜெண்டா!
ரோவர் திட்டமிட்டபடி செயல்படுவதாக தெரிவித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், ரோவர் மூலம் இரண்டு சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகள் சுவாரஸ்யமாக உள்ளன. இதுபோன்ற தரவுகள் வெளிவருவது இதுவே முதல் முறை என்றும் கூறினார். நிலவில் இருந்து தரவு பரிமாற்றம் கடினமானது என்றும், தரை கட்டுப்பாட்டு நிலையங்களைப் பயன்படுத்தி தரவை அணுகுவதற்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் உதவி தேவை எனவும் சோம்நாத் கூறினார்.
சூரியனுக்கு வின்கலத்தை அனுப்பும் இஸ்ரோவின் ஆதித்யா எல்-1 குறித்து பேசிய அவர், பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் இணைக்கப்பட்டு செயற்கைக்கோள் தயாராக உள்ளது. செப்டம்பர் முதல் வாரத்தில் ஏவப்பட வாய்ப்புகள் அதிகம். சோதனை தரவு துல்லியமாக இருந்தால் சரியான ஏவுதல் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

