மும்பை INDIA கூட்டணிக் கட்சிகள் கூட்டம்: புதிய லோகோ, தொகுதி பங்கீடு முக்கிய அஜெண்டா!
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கூடவுள்ள இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் மீதான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான போட்டி சூடுபிடித்துள்ள நிலையில், மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கூடவுள்ள இண்டியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் மீதான எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் ஏற்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கூட்டணியின் புதிய லோகோ வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொகுதி பங்கீடு உள்ளிட்ட முக்கிய சிக்கல்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
பாஜக-சிவசேனா அரசின் கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிரா மாநிலத் தலைநகர் மும்பையில் வருகிற 31ஆம் தேதி இண்டியா கூட்டணி கட்சிகளின் இரண்டு நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதற்காக எதிர்க்கட்சிகளின் உயர்மட்டத் தலைவர்கள் இப்போதே அங்கு முகாமிட்டு பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர். இண்டியா கூட்டணியில் ஏற்கனவே 26 கட்சிகள் உள்ள நிலையில், மேலும் சில கட்சிகள், அமைப்புகளை இணைத்து கூட்டணி விரிவாக்கம் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
பாஜக எதிராக ஓரணியில் திரண்டுள்ள எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் கடந்த ஜூன் மாதம் பாட்னாவிலும், இரண்டாவது கூட்டம் ஜூலை மாதம் பெங்களூருவிலும் நடைபெற்று முடிந்துள்ளது. மூன்றாவது கூட்டம் மும்பையில் நடைபெறவுள்ளது. மும்பை கூட்டம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், வரவிருக்கும் கூட்டத்தில் இண்டியா கூட்டணியில் மேலும் சில அரசியல் கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது என்றார்.
இருப்பினும், அக்கட்சிகளின் பெயர்களை பாஜகவை எதிர்க்கும் பல்வேறு கட்சிகளை ஒன்றிணைப்பதில் முக்கியப் பங்காற்றி வரும் ஐக்கிய ஜனதாதள தலைவரும், பீகார் முதல்வருமான நிதிஷ் குமார் வெளியிடவில்லை. ஆனால் தொகுதிப் பங்கீடு போன்ற தேர்தல் தொடர்பான முறைகள் குறித்து விவாதிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய நிதிஷ் குமார், “அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கான இண்டியா கூட்டணியின் வியூகங்கள் குறித்து மும்பையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் ஆலோசிப்போம். தொகுதி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் விவாதிக்கப்பட்டு இறுதி செய்யப்படும். இன்னும் சில அரசியல் கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும். தேர்தலுக்கு முன் அதிகபட்ச கட்சிகளை ஒன்றிணைக்க விரும்புகிறேன். அதனை நோக்கி பயணித்து வருகிறேன். எனக்கு தனிப்பட்ட விருப்பங்கள் எதுவும் இல்லை.” என்றார்.
கடந்த வாரம் மும்பை கூட்டம் குறித்து பேசிய சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) தலைவர் சஞ்சய் ராவத், எதிர்க்கட்சிகளின் இரண்டு நாள் கூட்டத்தில், புதிய அரசியல் கட்சிகள், குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களில் இருந்து பங்கேற்க வாய்ப்பு உள்ளது என்றார். மும்பையின் புறநகர் பகுதியில் உள்ள சொகுசு ஹோட்டலான கிராண்ட் ஹயாட்டில் நடைபெறவுள்ள இண்டியா கூட்டணியின் மூன்றாவது கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் எம்.பி.க்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடிக்கு எதிராக களமிறங்கும் பிரியங்கா காந்தி?
மேலும், இந்த கூட்டத்தின் போது இண்டியா கூட்டணி லோகோ வெளியிடப்படும். அதற்கான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. 140 கோடி இந்தியர்களை சென்றடைய முயற்சித்து வருகிறோம். இந்த லோகோ நாட்டையும், அதன் ஒற்றுமையையும் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும் எனவும் சஞ்சய் ராவத் தெரிவித்திருந்தார்.
இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா கூறுகையில், 2024 லோக்சபா தேர்தலுக்கான கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே தொகுதிப் பங்கீடானது, கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களுக்கு மட்டுமே அதிக நேரம் தேவைப்படுகிறது என்றார். கூட்டத்தை ஒழுங்கமைப்பதில் ஈடுபட்டுள்ள அவர், இண்டியா கூட்டணி கட்சிகளின் ஒற்றுமையை பாராட்டினார். அதற்கு சிறந்த உதாரணம் மகாராஷ்டிராதான் என்றும் அவர் கூறினார்.
தொகுதிப் பங்கீடு, ஒருங்கிணைப்புக் குழு அமைப்பது மற்றும் கூட்டணிக்கான ஒருங்கிணைப்பாளரை நியமிப்பது என அனைத்தும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.