பாகிஸ்தானில் உள்ள பாலகோட்டில் இந்திய விமானப்படை தாக்கி அழித்த ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத முகாமில் எப்படிப்பட்ட சொகுசு வசதிகள் பயங்கரவாதிகளுக்காக செய்யப்பட்டிருந்தன என்பது குறித்த விபரங்களும், அதன் புகைப்படங்களும் தற்போது வெளியாகி உள்ளன. இந்த பயங்கரவாத முகாம் வனப்பகுதிக்குள் 6 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் அமைக்கப்பட்டிருந்தது. ஏறக்குறைய 600 க்கும் அதிகமானவர்கள் தங்கும் அளவிற்கு பெரிய கூடங்கள் இருந்துள்ளன.

பயங்கரவாதிகள் பயிற்சி பெறுவதற்காக 2 ஏக்கரில், பயிற்சிக்கு தேவையான அனைத்து உபகரணங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 200 ஏகே துப்பாக்கிகள், கணக்கில்லாத துப்பாக்கி குண்டுகள், கையேறி குண்டுகள், வெடிகுண்டுகள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவை இருந்துள்ளன. 42 பயிற்சியாளர்களுக்கு அடையாள எண்ணுடன் கூடிய அட்டை, தொலைபேசி எண்களை ஜெய்ஷ் இ முகம்மது அளித்துள்ளது. பயிற்சி பெற்றவர்கள் ஜாதி அடிப்படையில் பிரிக்கப்பட்டு, 2019 லோக்சபா தேர்தலுக்கு முன் இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த தயார் நிலையில் இருந்துள்ளனர்.

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து 80 கி.மீ., தொலைவில் அடர்ந்த காட்டுப்பகுதியில், மலைமீது இந்த முகாம் அமைந்துள்ளது. முகாமில் 5 நட்சத்திர ஓட்டல்களை மிஞ்சும் அளவில் துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையம், நீச்சல் குளம், ஜிம்னாசிஸ்டிக் பயிற்சி பகுதி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் கொண்டுள்ளன. பயிற்சி கூடத்தில் பயங்கரவாத அமைப்புக்களின் கொடிகள், பேனர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. 2003-04 ம் ஆண்டில் இந்த மையம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. வெடி பொருட்களை சேமித்து வைக்க தனிகட்டிடமும் இந்த மையத்தில் அமைந்துள்ளது.

இந்த பயிற்சி மையம் பாக்., உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.,யின் நேரடி பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பில் செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஐஎஸ்ஐ மற்றும் 250 க்கும் அதிகமான பயங்கரவாதிகள் இந்த மையத்தில் பயிற்சி பெற்று வந்துள்ளனர். இந்த மையத்தில் அதிநவீன ஆயுதங்கள், வெடி பொருட்கள், தாக்குதல் கருவிகள், தற்கொலைப்படை தாக்குதல் தயாரிப்பு, தற்கொலைப்படை தாக்குதல் வாகனங்கள் வடிவமைப்பு உள்ளிட்ட பலவும் இருந்துள்ளன.