முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தேர்தல் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதனால், சந்திரபாபு நாயுடுக்கு அடுத்தடுத்து பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து ஜெகன்மோன் அதிரடி காட்டி வருகிறார். 

ஆந்திர மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் குப்பம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இத்தேர்தலில் அவருடைய கட்சி படுதோல்வியை சந்தித்து, ஒய்எஸ்ஆர் காங்கிரசிடம் ஆட்சியை பறி கொடுத்தது. இக்கட்சியை சேர்ந்த ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்றுள்ளார். அவர் ஆட்சிக்கு வந்ததில் இருந்து சந்திரபாபு நாயுடுக்கு பல்வேறு வகையில் தொல்லைகள் கொடுக்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில், சந்திரபாபு நாயுடு தேர்தல் வெற்றியை எதிர்த்து, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின்  சித்தூர் பொறுப்பாளர் வித்யா சாகர் என்பவர் ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் சந்திரபாபு நாயுடு தனது சொத்து விவரங்களை தேர்தல் ஆணையத்திற்கு அளித்ததில் முதல்வராக பதவி வகித்தபோது பெற்ற சம்பளத் தொகையை எந்த ஒரு இடத்திலும் குறிப்பிடாமலும் உள்ளார்.

உண்மையை மறைத்து அவர் தேர்தல் ஆணையத்திற்கு சமர்ப்பித்துள்ளதாகவும் அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டுமென என கோரிக்கை விடுத்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.