பணம் தட்டுப்பாடு காரணமாக, ரேஷன் பொருட்களை கொடுக்க மறுத்த நியாய விலைக்கடையை பொது மக்கள் சூறையாடினார்கள்.

மத்திய பிரதேச மாநிலம், சத்ரபூர் மாவட்டம், பர்தகா கிராமத்தை சேர்ந்த முன்னிலால் ஆகிர்வார், நியாய விலைக்கடை நடத்தி வருகிறார்.

அந்த கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் ரேஷன் பொருட்களை வாங்குவதற்காக அந்தக் கடைக்குச் சென்றனர்.

தற்போது நிலவும் பணத்தட்டுப்பாடு காரணமாக, ரேஷன் பொருட்களை வாங்கும் அளவுக்கு அவர்களிடம் பணம் இல்லை. ஆனால், பணம் கொடுக்காமல் பொருட்களை கொடுக்க கடைக்காரர் மறுத்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த கிராம மக்கள் அந்தக் கடையை சூறையாடி, அங்கு இருந்த பொருட்களை தங்கள் வீடுகளுக்கு அள்ளிச் சென்றனர். இது குறித்து நியாய விலைக்கடை உரிமையாளர் போலீசில் புகார் செய்து இருக்கிறார்.

ஆனால், போலீசார் இந்த தகவலை மறுத்தனர். கடையில் சாதரணமான ‘தள்ளு முள்ளு’தான் நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர். பர்தகா கிராம பஞ்சாயத்து தலைவர் நோனே லாலும், சூறையாடல் புகாரை மறுத்தார்.

‘‘கடைக்காரர் கடந்த 4 மாதங்களாக ரேஷன் பொருட்களை மக்களுக்கு வழங்கவில்லை. அது குறித்து புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால், 4 மாதங்களுக்கான மொத்த பொருட்களையும் வழங்கும்படி மக்கள் கேட்டனர். அதற்கு அவர் ஒரு மாதத்துக்கு மட்டும்தான் தர முடியும் என்று கூறியதால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதாக’’ நோனே லால் கூறினார்.

இதற்கிடையில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், அந்த நியாய விலைக்கடையில் இருந்து மளிகை பொருட்களை சிலர் எடுத்துச் செல்லும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன.