கர்நாடகாவில் உடுப்பி பெஜாவரா மடத்தின் மடாதிபதி விஸ்வேஷா தீர்த்த சுவாமிகள் இன்று காலமானார். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, கர்நாடக முதல்வர் எடியூரப்பா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் உள்ள முக்கியமான இந்து மத தலைவர்களில் விஸ்வேஷா தீர்த்த சுவாமி முக்கியமானவர். இவர், கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள பெஜாவர் மடத்தின் மடாதிபதியாக இருந்து வருபவர் சுவாமி விஸ்வேஷா தீர்த்தர் (88). இவர் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதனையடுத்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 

நேற்று முதல் சுயநினைவைு இழந்து, மூளைச் செயல்பாட்டில் பாதிப்பு ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து வந்தது. இந்நிலையில், உடுப்பி பெஜாவர் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷ தீா்த்த சுவாமிகள் சிகிச்சை பலனின்றி இன்று காலை 9:30 மணிக்கு காலமானார். அவரது உடல், பக்தர்கள் பார்வைக்காக அஜ்ஜர்காடு மகாத்மா காந்தி மைதானத்தில் 3 மணிநேரம் வைக்கப்படும். அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் போது மாநில அரசு மரியாதை அளிக்கப்படும் என உடுப்பி எம்எல்ஏ கே.ரகுபதி பட் தெரிவித்தார். இவர் பாஜக தலைவர்கள் பலருக்கும், விஸ்வேஷா தீர்த்த சுவாமி நெருக்கமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரதமர் மோடி இரங்கல்

பெஜாவர் மடாதிபதி விஸ்வேஷா தீர்த்த சுவாமி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். விஸ்வேஷா தீர்த்த சுவாமியிடமிருந்து கற்றுக்கொள்ள பல வாய்ப்புகள் கிடைத்தது எனது பாக்கியம் என கூறியுள்ளார்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா இரங்கல்

ஸ்ரீ ஸ்ரீ விஸ்வேஷா தீா்த்த சுவாமிகளின் ஆன்மா சாந்தியடைய பகவான் கிருஷ்ணரிடம் பிரார்த்திக்கிறேன். அவரது பிரிவால் வாடும் பக்தர்கள் தங்கள் வலியைக் கடந்து வலிமை பெற வேண்டுமென்றும் நான் பிரார்த்திக்கிறேன் என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.