மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவில் ஒரு தனியார் மருத்துவமனை ரூ.500, ரூ.1000 நோட்டை வாங்க மறுத்துவிட்டதால், ரூ.40 ஆயிரத்துக்கு சில்லரை காசாக கொடுத்து பில் கட்டிவிட்டு நோயாளி ஒருவர் வெளியே வந்துள்ளார். இதனால், மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
கொல்கத்தா நகரின் புறநகர் பகுதி நியு அலிப்போர். இங்கு பி.பி போடார் மருத்துவமனை மற்றும் ஆய்வு மையம் செயல்பட்டு வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக 35 வயதுடைய சுகந்தா சாலே என்பவர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை முடிந்து, கடந்த புதன்கிழமை(9-ந்தேதி) டிஸ்சார்ஜ் செய்வதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியது.
இதையடுத்து, சுகந்தா சாலேவுக்கு சிகிச்சை அளித்த வகையில் ரூ.40 ஆயிரம் பில் செலுத்த மருத்துவமனை நிர்வாகம் கூறியது. சுகந்தா உறவினர்கள், ரூ.500, ரூ.1000 நோட்டுகளாகக் கொடுத்தனர். ஆனால், அதற்கு செல்லாததாக அறிவிக்கப்பட்ட ரூபாய் நோட்டுக்களை வாங்க மறுத்தது. உடனே, சுகந்தாவின் பெற்றோர்கள், ரூ.40 ஆயிரத்துக்கு காசோலை கொடுத்தனர். அதையும், மருத்துவமனை நிர்வாகம் வாங்க மறுத்து, சுகந்தாவை டிஸ்சார்ஜ் செய்ய மறுத்து சிறை வைப்பதுபோல் வெளியே அனுப்ப மறுத்துவிட்டது.
இதையடுத்து, புதன்கிழமை இரவு தனது நண்பர்கள், உறவினர்கள், மூலம் வாட்ஸ் அப், பேஸ்புக்கில் சுகந்தா சாலே நடந்த விவரங்களைக் கூறியும், தனக்கு சில்லரைகாசுகளாக கொடுத்து உதவவும் உதவி கோரினார்.
இதைக் வாட்ஸ்அப், பேஸ்புக் வாயிலாக அறிந்த நண்பர்களும், உறவினர்களும், முகம்தெரியாத நண்பர்களும், சுகந்தாவின் வீட்டிலும், மருத்துவமனையிலும், சில்லரை காசுகளாகக் கொண்டு வந்து கொடுத்தனர். இதனால், வியாழக்கிழமை அதிகாலையிலேயே ரூ.40 ஆயிரத்துக்கு சில்லரையாக சேர்ந்துவிட்டது.
இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகத்திடம் ரூ.40 ஆயிரத்துக்கான சில்லரை காசுகளைக் கொடுத்து, சுகந்தாவை அழைத்துச்செல்ல உறவினர்கள் முயன்றனர். ஆனால், அப்போதும் மருத்துவமனை நிர்வாகம் பிரச்சினை செய்து, சில்லரை காசுகளை வாங்க முடியாது, டிமான்ட் டிராப்ட்(டிடி) ஆக கொடுங்கள் எனக் கூறியது. இதனால், ஆத்திரமடைந்த சுகந்தா பெற்றோர்கள், சட்டப்பூர்வமான காசுகளை மட்டுமே கொடுத்துள்ளோம். இப்போது அனுப்பாவிட்டால், போலீசில் புகார் செய்ய வேண்டியதுவரும் என மருத்துவமனை நிர்வாகத்துக்கு எச்சரிக்கை செய்தனர். அதன்பின் சுகந்தா சாலேவைமருத்துவமனை நிர்வாகம் டிஸ்சார்ஜ் செய்தது.
அதன்பின், ரூ.40 ஆயிரத்துக்கான சில்லரை காசுகளை 6 ஊழியர்களை நியமித்து 3 மணி நேரம் எண்ணியது.
இது குறித்து சுகந்தா சாலேவின் சகோதரர் சேனாஷிஸ் கூறுகையில், “ எங்களிடம் இருக்கும் பழைய ரூபாய் நோட்டுக்களை அல்லது காசோலையை பெற்றுக்கொண்டு சகோதரரை அனுப்புங்கள் என மருத்துவமனை நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தோம். ஆனால், அவர்கள் மறுத்துவிட்டனர். அதன்பின்தான் சில்லரைகாசுகளாக கொடுத்தோம். என் உறவினர்கள் குழந்தைகள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணத்தைக்கூட உடைத்து, பணத்தை சேகரித்து எனது தம்பியை டிஸ்சார்ஜ் செய்தோம்'' எனத் தெரிவித்தார்.
