பயண நேரத்திற்குள் போர்டிங் கேட்டிற்கு வந்தும், விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்று இண்டிகோ நிறுவனத்திற்கு எதிராக பயணி புகார் அளித்துள்ளார்.

Passenger Denied Boarding at Indigo Flight: போர்டிங் கேட்டிற்கு வந்தும் விமானத்தில் ஏற அனுமதிக்கப்படவில்லை என்று இண்டிகோ நிறுவனத்திற்கு எதிராக ஹரியானாவின் குருகிராம் நகரைச் சேர்ந்த பயணி புகார் அளித்துள்ளார். சில நொடிகள் தாமதமாக வந்ததால், தனக்கு முன்னால் போர்டிங் கேட் மூடப்பட்டது என்றும், இதனால் விமானத்தை தவறவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

இண்டிகோ விமான நிறுவனம் மீது புகார்

ஜூன் 5 ஆம் தேதி டெல்லியில் இருந்து பாக்டோகிராவுக்கு பயணிக்கவிருந்த அமித் மிஸ்ரா, போர்டிங் நேரத்திற்குள் கேட்டிற்கு வந்தும் தன்னை விமானத்தில் ஏற அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இதனால் தனது வணிகப் பயணம் ரத்து செய்யப்பட்டு, பெரும் நிதி இழப்பு ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். 60 நொடிகள் தாமதத்தால் ஏற்பட்ட இழப்பை விளக்கி, அவர் லிங்க்ட்இன்னில் விரிவான பதிவை வெளியிட்டுள்ளார். 

இதுதான் உங்கள் பொறுப்பா?

'இண்டிகோ நிறுவனமே, இதுதான் உங்கள் பொறுப்பா? 60 நொடிகள் தாமதமாக வந்ததற்காக, கேட் திறந்திருந்தும், என்னுடைய முழு வணிகப் பயணமும் ரத்து செய்யப்பட்டு, மாற்றுப் பயணத்திற்கு இரண்டு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை' என்று அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

கேட்டை மூடியது ஏன்?

காலை 7:30 மணிக்கு புறப்படவிருந்த விமானத்திற்கு, காலை 6:25 மணிக்கே தனது சாமான்களை சோதனை செய்துவிட்டதாகவும், 7:04 மணிக்கே போர்டிங் கேட்டிற்கு வந்துவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இது விமானம் புறப்படுவதற்கு 26 நிமிடங்களுக்கு முன்பாகும். இருப்பினும், ஊழியர்கள் தன்னைத் திருப்பி அனுப்பிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கேட் திறந்திருந்தது, தனக்கு முன்னாலும் பின்னாலும் பயணிகள் இருந்தனர். தான் உள்ளே செல்ல அனுமதி கேட்டு மூன்று நிமிடங்களுக்குப் பிறகு, ஊழியர்கள் டிஜிசிஏ அதிகாரிகளை அழைத்து, தனக்கு முன்னால் கேட்டை மூடிவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விமான நேரம் மாற்றம்

விமான நேரம் 7:20 மணிக்கு மாற்றப்பட்டிருந்தது. ஆனால், தனக்கு எஸ்எம்எஸ் அல்லது மின்னஞ்சல் அல்லது வேறு எந்த தகவலும் வரவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். தனது அடுத்த விமானம் குறித்தும் அவர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். டெல்லியில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானமும் 6:45 மணியிலிருந்து 6:35 மணிக்கு மாற்றப்பட்டிருந்தது. ஆனால், புதிய நேரமான 6:35 மணி ஆகியும், 6:07 மணி வரை போர்டிங் தொடங்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். 

இண்டிகோ விமான நிறுவனம் விளக்கம்

இதற்கிடையில், 'ஐயா, உங்கள் பதிவு செய்யப்பட்ட தொலைபேசி எண்ணில் உங்களைத் தொடர்பு கொள்ள முயற்சித்தோம்.  ஆனால், எங்களால் உங்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. தயவுசெய்து வேறு எண்ணையும், உங்களுக்கு வசதியான நேரத்தையும் எங்களுக்குத் தெரிவிக்கவும், நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்கிறோம்' என்று விமான நிறுவனம் பதிலளித்துள்ளது.