உத்தரபிரதேசம் மாநிலத்தில் எந்த நேரத்திலும் தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. அங்கு ஆளுங்கட்சியான சமாஜ்வாடியில் உச்சக்கட்ட மோதல் ஏற்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவிக்க முதலமைச்சர் அகிலேஷ், மாநில தலைவரான சிவபால் ஆகியோர் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இதனால் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம், முலாயம் சிங்கின் மற்றொரு தம்பி ராம்கோபால் யாதவ் தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார். மேலும் கட்சியின் மாநில தலைவர் பதவியில் இருந்து சிவபால் சிங் நீக்கப்பட்டார். இதை தொடர்ந்து, கட்சி தலைமை அலுவலகத்தையும் அகிலேஷ் யாதவ் தரப்பினர் கைப்பற்றினர்.

தற்போது அக்கட்சியின் சைக்கிள் சின்னத்தை கைப்பற்ற அகிலேஷ் மற்றும் முலாயம் தரப்பினர் இடையே கடும் முயற்சி நடந்து வருகிறது. இதனால் கட்சியின் சின்னத்தை மீட்க முலாயம் சிங் நேற்று டெல்லி தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு சென்று அதிகாரிகளிடம் மனு அளித்தார்.

இதைதொடர்ந்து, புதிய தேசிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட உத்தரபிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், தேர்தல் ஆணைய அதிகாரிகளை இன்று சந்திக்கிறார்.

சமாஜ்வாடி கட்சியின் பொதுச்செயலாளர் ராம் கோபால் யாதவ் தேர்தல் அதிகாரிகளை சந்தித்து, தங்களுக்கு சைக்கிள் சின்னத்தை தரவேண்டும் என்று கோரிக்கை விடுக்க உள்ளார். இதில், யாருக்கு சைக்கிள் சின்னம் என்பது தேர்தல் ஆணையம் கையில் உள்ளது. இதற்கிடையில் இந்த பிரச்சனையை நீதிமன்றம் வரை கொண்டு செல்ல இருதரப்பினரும் தீவிரமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.