புதுடெல்லி, அக். 14:-

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரை நவம்பர் 16-ந்தேதி தொடங்கி டிசம்பர் 16-ந்தேதி வரை நடத்த நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று முடிவு எடுக்கப்பட்டது.

வழக்கமாக குளிர்காலக் கூட்டத்தொடர் நவம்பர் மூன்றாவது அல்லது 4-வது வாரத்தில்தான் தொடங்கும். ஆனால், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா தலைமையிலான அரசு, சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அடுத்த நிதியாண்டில் ஏப்ரல் முதல் தேதியில் இருந்து நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக கூட்டம் முன்கூட்டியே நடத்தப்பட இருக்கிறது.

மத்திய ஜி.எஸ்.டி. மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட ஜி.எஸ்.டி வரி மசோதாவுக்கு நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற குளிர்காலக் கூட்டத்தை முன்கூட்டியே நடத்த இருக்கிறது. அதேபோல, பொது பட்ஜெட்டையும் ஒருமாதம் முன்பாகவே தாக்கல் செய்யவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

வழக்கமாக பொது பட்ஜெட் பிப்ரவரி மாதத்தின் கடைசி வேலைநாளில்தான் தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த முறை முன்கூட்டியே தாக்கல் செய்வதன் மூலம், ஜி.எஸ்.டி. வரியை நடைமுறைப்படுத்தும் போது வருவாய் மற்றும் செலவுகளை எப்படி கையாள்வது என்பதை முடிவு செய்யவும் முன்கூட்டியே பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

இந்த குளிர்காலக் கூட்டத்தொடரில் ஜி.எஸ்.டி மசோதா தவிர்த்து, 15 புதிய மசோதாக்களையும் மத்திய அரசு தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 4-வது முறையாக அவசரச் சட்டமாக அறிவிக்கப்பட்ட எதிரி சொத்து சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும்.

மேலும், தொழிலாளர் சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களுக்கு ஒப்புதல் பெறுவது, குறிப்பாக அனைத்து துறைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயம் செய்யும் திருத்தத்தை கொண்டு வருவது முக்கியமாக இருக்கும். இதற்கான ஒப்புதலைப் பெற அனைத்துக் கட்சிகளுடன் கருத்தொற்றுமை கொண்டுவர மத்திய தொழிலாளர்துறை அமைச்சகம் முயற்சிக்கும் எனத் தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல், கடந்த 29-ந்தேதி ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நடத்திய `துல்லிய மின்னல்' தாக்குதலை, அரசியல் ஆதாயத்துக்காக பாரதிய ஜனதா அரசு பயன்படுத்தி வருகிறது என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த விவகாரம் குளிர்காலக் கூட்டத்தொடரில் முக்கிய விவாதமாக அமையும் எனத் தெரிகிறது