மக்களவை தேர்தலில் வெற்றிப்பெற்ற அனைத்து கட்சி தலைவர்களுக்கும், பிரதமர் மோடி இன்று விருந்து வைக்க உள்ளார். இதில் மாயாவதி, லாலு ஆகியோர் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளனர்.

மக்களவை 2019 தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இதையொட்டி, தேர்தலில் வெற்றி பெற்றதற்காக, மக்களவையில் போட்டியிட்ட அனைத்து எம்பிக்களின் கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மோடி இன்று விருந்து அளிக்கிறார்.

டெல்லியில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலில் நடக்கும் இந்த விருந்தில், 750க்கும் மேற்பட்ட எம்பிக்களுக்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் சார்பில், அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விருந்தில் காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி உள்பட பல்வேறு கட்சி எம்பிக்களும், பாஜக எம்பிக்களுடன் பங்கேற்க உள்ளனர்.

ஆனால் மாயாவதி மற்றும் லாலு பிரசாத் ஆகியோர் இந்த விருந்தில் கலந்து கொள்ளவில்லை என கூறியுள்ளனர்.

மேலும், பீகாரின் முஷாபர் நகரில் மூளைக்காய்ச்சலால் 118 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்துவதால், இந்த விருந்தை புறக்கணிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர். இதில் கலந்து கொண்டால் தங்களது உணவுக்கு செலவிடும் தொகையை, பீகாரில் சிகிச்சை பெறும் குழந்தைகளுக்கு கொடுக்க உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.