டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள பாரத ஸ்டேட் வங்கிக் கிளையில் எம்பிக்கள் பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டு செல்லாது என மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் பழைய நோட்டுகள் மாற்றுவது, புதிய ரூ.2,000 நோட்டுகள், சில்லறை நோட்டுகள் பெறுவதற்கு வங்கிகள், ஏடிஎம் மையங்களுக்கு, மக்கள் அதிகாலை முதல் இரவு வரை நாளுக்கு நாள் அதிகமாக உள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று முன்தினம் தொடங்கிது. இதனால், பல எம்.பி.க்கள் தங்கள் செலவுக்காக தனி கணக்கு பராமரிக்கப்பட்டு வரும் நாடாளுமன்ற வளாக பாரத ஸ்டேட் வங்கி கிளைக்கு கடந்த 2 நாட்களாக வர தொடங்கினர்.
"எம்.பி.' என்பதால் விருப்பம் போல எவ்வளவு வேண்டுமானாலும் பணம் எடுக்க முடியும் என்ற நினைப்புடன் வந்த பலருக்கும் ஏமாற்றமே மிஞ்சியது. ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொதுமக்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பணம் போடுவது, எடுப்பது ஆகியவை தொடர்பான உச்சவரம்பு எம்.பி.க்களுக்கும் பொருந்தும் என்று நேற்று வங்கி அதிகாரிகள் கூறினர்.

இதையடுத்து, தினசரி பணம் எடுக்கும் வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ள தொகைக்கான காசோலையை வங்கி அலுவலரிடம் கொடுத்து பணத்தை எம்.பி.க்கள் பெற்றுச் சென்றதை காண முடிந்தது.

இதேபோல, தங்கள் கணக்கில் ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை போடுவதற்காக வந்த எம்.பி.க்களிடம் அவர்களுக்குரிய அடையாள அட்டை எண் போன்ற விவரங்களைப் பதிவு செய்த பிறகே பணத்தை வங்கி அலுவலர்கள் பெற்றனர்.

நாடாளுமன்ற வளாகத்தில் பாரத ஸ்டேட் வங்கியின் ஒரு கிளை உள்ளது. இங்கு எம்.பி.க்களின் கணக்கு மட்டும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதேபோல, நாடாளுமன்ற இணைப்பு கட்டடத்தில் மற்றொரு பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இங்கு எம்.பி.க்களின் உதவியாளர்கள், மக்களவை, மாநிலங்களவை ஆகியவற்றின் செயலக ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோரின் வங்கிக் கணக்குகள் பராமரிக்கப்படுகின்றன.

இதனால், இணைப்பு கட்டட வளாகத்தில் உள்ள ஏடிஎம் மையங்கள், வங்கியில் ஊழியர்கள், அதிகாரிகள் ஆகியோரின் கூட்டம் 2வது நாளாக நேற்று நீண்ட வரிசையில் நின்றது. இதையடுத்து, தங்களுக்கு வேண்டிய சில எம்.பி.க்களை வைத்து பிரதான கட்டடத்தில் உள்ள வங்கி மூலம் தங்கள் வங்கிக் கணக்கில் பணம் போட சில அதிகாரிகள் முயன்றனர்.

ஆனால், எம்.பி.க்கள், அவர்களின் குடும்பத்தினர் ஆகியோர் கணக்குகள் நீங்கலாக வேறு கிளைகளுக்குரிய வங்கி கணக்கில் பணம் போட முடியாது என்று வங்கி அதிகாரிகள் கூறினர். இதனால், சில எம்.பி.க்கள் அதிருப்தியடைந்தனர். அதிகாரிகள் ஏமாற்றம் அடைந்தனர். எனினும், இந்த நடவடிக்கையை பெரும்பாலான எம்.பி.க்கள் வரவேற்றனர்.