Asianet News TamilAsianet News Tamil

சிறுவர்கள் வாகனங்களைத் தொட்டால் பெற்றோர்களுக்கு தண்டனை! போலீசாரின் நூதன நடவடிக்கை!

Parents who are allowed to drive their children vehicles Hyderabad police action
Parents who are allowed to drive their children's vehicles: Hyderabad police action
Author
First Published Mar 12, 2018, 5:44 PM IST


பதினெட்டு வயதுக்குட்பட்ட சிறுவர்களை பைக், கார் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத் போலீசார் தான் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

தெலங்கானா மாநிலம், ஐதாராபாத் நகரில் நாளுக்குநாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருகின்றன. விபத்துக்களைத் தடுக்கும் வகையில் ஐதாராபாத் நகரில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக இந்த நடவடிக்கையை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இது குறித்து, ஐதராபாத் போக்குவரத்து துணை ஆணையர் ரங்கநாத், செய்தியாளர்களிடம், ஐதராபாத் நகரில் நாளுக்கு நாள் சாலைவிபத்துக்கள் அதிகரித்து வந்தன. அதிலும் குறிப்பாக 14 வயது முதல் 16 வரையிலான சிறுவர்கள் பைக், ஸ்கூட்டர், கார்களை உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் ஓட்டி விபத்து ஏற்படுத்துகிறார்கள். 

கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 5 சிறுவர்கள் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கையும் எடுக்க முடியாது. அதனால் இவர்களுக்கு இருசக்கர வாகனங்கள் ஓட்டுவதற்கு அனுமதித்த பெற்றோர்களை தண்டித்தால் விபத்துக்கள் குறையும் என திட்டமிட்டோம். உரிய ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டிய 69 சிறுவர்கள் சிக்கினார்கள்.

இவர்களின் பெற்றோர்களுக்கு உரிய அபராதம் விதிப்பதற்கு பதிலாக, கவனக்குறையாக வாகனத்தை கையாளுதல், உரிமம் இல்லாதவர்கள் வாகனத்தை கையாள அனுமதித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினோம். இவர்களுக்கு நீதிபதி ஒரு நாள் முதல் 3 நாள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதித்தார். இதற்கு முன் கடந்த 2 ஆண்டுகளாக பெற்றோருக்கு அபராதம் விதித்தும் எந்தவிதமான பலனும் இல்லை என்பதால், சிறை தண்டனை விதித்தோம் என்று அவர் கூறினார்.

இந்த நடவடிக்கையால் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 69 சிறுவர்களின் தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், 3 சிறுவர்கள் கைது செய்யப்பட்டு, சிறுவர் நலக்காப்பகத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். போக்குவரத்துத்துறையின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. பெற்றோரை கைது செய்வதைப் பார்க்கும் பிள்ளைகள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை எடுக்க அஞ்சுவதாகவும் இதனால், கடந்த ஒரு மாதமாக விபத்துக்கள் குறைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios