டெல்லியில் காற்றுத் தரம் 'மிகவும் கடுமையான' நிலையை எட்டியதால், காற்றின் தர மேலாண்மை ஆணையம் GRAP நிலை III மற்றும் IV கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, அத்தியாவசியமற்ற அனைத்து கட்டுமானப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் அதைச் சுற்றியுள்ள தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (NCR) காற்றுத் தரம் மோசமடைந்ததைத் தொடர்ந்து, காற்றின் தர மேலாண்மை ஆணையம் (CAQM) GRAP நிலை III மற்றும் நிலை IV கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது.

காற்றுத் தரக் குறியீடு (AQI) அபாய நிலை

சனிக்கிழமை காலை 10 மணிக்கு டெல்லியின் AQI 401-ஐ எட்டியதால், ஆரம்பத்தில் GRAP-இன் நிலை III அமல்படுத்தப்பட்டது. எனினும், காற்றுத் தரம் தொடர்ந்து அதிகரித்து, இரவு 8 மணிக்கு 450-ஐக் கடந்து, 'மிகவும் கடுமையான' (Severe Plus) வரம்பை அடைந்தது. இரவு 9 மணிக்கு AQI 455 ஆக உயர்ந்தது.

இதையடுத்து, காற்றுத் தரத்தின் மேலும் மோசமடைவதைத் தடுக்க, உடனடியாக நிலை IV கட்டுப்பாடுகள் அமலுக்குக் கொண்டுவரப்பட்டன.

CAQM அறிக்கையின்படி, குறைந்த காற்றின் வேகம், நிலையான வளிமண்டலம் மற்றும் மாசுபடுத்திகள் சிதறாமல் இருப்பது போன்ற சாதகமற்ற வானிலை காரணங்களால் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கியக் கட்டுப்பாடுகள் என்னென்ன?

தற்போது GRAP-இன் அனைத்து நிலைகளும் (நிலை I, II, III மற்றும் IV) அமலில் உள்ள நிலையில், நிலை III மற்றும் IV-இன் கீழ் விதிக்கப்பட்ட முக்கியக் கட்டுப்பாடுகள் பின்வருமாறு:

வாகனக் கட்டுப்பாடுகள்

டெல்லி, குருகிராம், ஃபரிதாபாத், காஜியாபாத் மற்றும் கௌதம் புத் நகர் ஆகிய பகுதிகளில் BS III பெட்ரோல் மற்றும் BS IV டீசல் நான்கு சக்கர வாகனங்களின் இயக்கத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

அத்தியாவசியப் பொருட்கள் அல்லாத பிற பொருட்களை ஏற்றிச் செல்லும் BS IV டீசல் அல்லது அதற்கும் குறைவான தரத்திலான டிரக்குகள் டெல்லிக்குள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பதிவு செய்யப்பட்ட டீசலில் இயங்கும் BS-IV மற்றும் அதற்கும் குறைவான கனரக மற்றும் நடுத்தர சரக்கு வாகனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அலுவலக மற்றும் பள்ளி விதிமுறைகள்

டெல்லியில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் அலுவலகங்களும் 50% ஊழியர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும், மீதமுள்ளவர்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்புகளுக்கு ஹைபிரிட் முறையில் (Hybrid Mode) வகுப்புகளை நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி, நேரடி வகுப்புகள் தவிர, ஆன்லைன் வகுப்புகளையும் நடத்த வேண்டும்.

கட்டுமானம் மற்றும் இடிப்புப் பணிகளுக்குத் தடை

GRAP-இன் நிலை III-இன் கீழ் டெல்லி-NCR முழுவதும் அனைத்து கட்டுமான மற்றும் இடிப்புப் பணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தினக்கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்.

நிலை IV அமலானதைத் தொடர்ந்து, நெடுஞ்சாலைகள், சாலைகள், மேம்பாலங்கள், மின் பரிமாற்றம், குழாய்கள், தொலைத்தொடர்பு போன்ற பொது முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களுக்கான விதிவிலக்குகளும் நீக்கப்பட்டு, அனைத்துப் பணிகளும் தடை செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களுக்கான அறிவுரை

காற்றுத் தரத்தின் மிக மோசமான நிலையின் காரணமாக, ஆலோசனையை வழங்கியுள்ளது குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் வெளிப்புற நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் எனக் அறிவுறுத்தப்பட்டுள்ளது.