காஷ்மீர் மாநிலம் புல்வாமா தாக்குதலுக்கு பிறகு, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள  பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது.  இதில் 350 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் போர் விமானங்களும் இந்திய வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைய முயன்றன.

இதையடுத்து இந்திய போர் விமானங்கள் உடனடியாக தீவிரமாக செயல்பட்டு பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டி அடித்தன. இருநாட்டு வான்பகுதியில் ஏற்பட்ட இந்த மோதலின்போது, இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தன் பாகிஸ்தானிடம் பிடிபட்டார். 

இதையடுத்து, கடந்த வெள்ளிக்கிழமை இந்திய விமானி அபிநந்தனை பாகிஸ்தான் வாகா எல்லை வழியாக இந்தியாவிடம் ஒப்படைத்தது.

இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லைப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. 

இந்த நிலையில், இன்று காலை 11.30 மணியளவில் பாகிஸ்தானுக்கு சொந்தமான ஆளில்லா உளவு விமானங்கள் பிகானிர் நல் செக்டாரில் அத்துமீறி நுழைந்தன. இந்திய விமானப் படையின்  பாதுகாப்பு ரேடார்கள் இதைக்கண்டுபிடித்தது. 

இதையடுத்து, பாகிஸ்தானுக்கு சொந்தமான உளவு விமானத்தை சுகோய் 30MKI விமானம் அதிரடியாக சுட்டு வீழ்த்தியது.