பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால், எல்லைப் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.

இந்தியா - பாகிஸ்தான் எல்லை பகுதியான பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் மீண்டும் கடும் தாக்குதலைத் தொடங்கியுள்ளதால், எல்லைப் பதற்றம் அதிகரித்துள்ளது.வெள்ளிக்கிழமை மாலை ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) பாகிஸ்தான் சிறு ஆயுதங்கள் மற்றும் பீரங்கித் தாக்குதல்களை நடத்தியது. இந்திய ராணுவம் தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது. ட்ரோன்களையும் இந்தியா மீது பாகிஸ்தான் ஏவி வருகிறது. இதனை இந்தியாவின் வான் பாதுகாப்பு கவசம் அழித்து வருகிறது. 

காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறுகையில், தனது வீட்டு அருகே குண்டு வெடிக்கும் சப்தம் கேட்டதாக தெரிவித்துள்ளார். மேலும் வீட்டில் இருந்து யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளார். 

இதனிடையே மே 7 மற்றும் 8 தேதிகளில், இந்தியாவின் மேற்கு எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் பலமுறை வான்வெளி மீறல்கள் மற்றும் ட்ரோன் ஊடுருவல்களை மேற்கொண்டு, இந்திய ராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்தது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், 36 இடங்களில் 300 முதல் 400 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டதாகவும், பல ட்ரோன்கள் இந்தியப் படைகளால் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் கர்னல் சோஃபியா குரேஷி தெரிவித்தார். ஆரம்பகட்ட விசாரணையில், இந்த ட்ரோன்கள் துருக்கியில் தயாரிக்கப்பட்ட அசிஸ்கார்ட் சோங்கர் மாடல்கள் என்று தெரியவந்துள்ளது.

இந்திய ஆயுதப்படைகள் புதன்கிழமை பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் ஒன்பது பயங்கரவாத உள்கட்டமைப்புகளை குறிவைத்த இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு பாகிஸ்தானின் பதிலடி முயற்சி வந்தது. ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு நேரடி பதிலடியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. வியாழக்கிழமை, இந்திய ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லைகளில் (IB) ஒரு பெரிய அளவிலான எதிர்-ட்ரோன் நடவடிக்கையின் போது 50க்கும் மேற்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியதாக வட்டாரங்கள் தெரிவித்தன.