தேசிய பாதுகாப்பு படையின் அதிகாரப்பூர்வ இணையதளம் பாகிஸ்தானை சேர்ந்த நபர்களால் முடக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீவிரவாத தடுப்பு படையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தேசிய பாதுகாப்பு படையின் அதிகாரபூர்வ இணையதளம் முடக்கப்பட்டதுடன், பிரதமர் மற்றும் இந்தியாவுக்கு எதிரான செய்திகளை அனுப்பியதும் கண்டறியப்பட்டுள்ளது. இதில் பாகிஸ்தான் தொடர்புடைய ஹேக்கர்கள் எனும் இணையதள ஊடுருவல் குற்றவாளிகள் ஈடுபட்டிருக்க கூடும் என சந்தேகிக்கப்படுகிறது. 

www.nsg.gov.in -என்ற இணையதளம் முடக்கியது நேற்று கண்டறியப்பட்டவுடன், உடனடியாக தீவிரவாத தடுப்பு படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது இணையத்தின் முகப்பு பக்கத்தில் ஊடுருவிய நபர்கள், அலோன் இன்ஜெக்டர் என தங்களை அடையாளம் காட்டியிருந்தனர்.அவர்கள் ஜம்முகாஷ்மீர் குறித்தும் மற்றும் தேசத்திற்கு எதிரான பல்வேறு அவதூறு கருத்துகளையும் இணையத்தில் பதிவிட்டிருந்தனர். 

தற்போது, இணையதள பக்கத்தை சரி செய்யும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.தீவிரவாத தடுப்பு மற்றும் கொள்ளை தடுப்பு நடவடிக்கைகளுக்காக மத்திய அரசின் அமைப்பாக கடந்த 1984ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு படை தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.