Padmathi film release date postponement
தீபிகா படுகோன் நடித்துள்ள பத்மாவதி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி பல்வேறு காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக அதன் இயக்குநர் சஞ்சய்
லீலா பன்சல் தெரிவித்துள்ளார்.
வரலாற்று திரைப்படமான பத்மாவதி திரைப்படத்துக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. பத்மாவதி திரைப்படத்தை பாலிவுட்டின் பிரபல திரைப்பட இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ளார். ராஜஸ்தானின் சித்தூர் அரசி பத்மாவதி குறித்த வரலாற்று படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படம் தங்களை தவறாக சித்தரிப்பதாக கூறி ராஜ்புத் கார்னி சேவா என்கிற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூரில் நடந்த படப்பிடிபிப்பின்போது, உள்நுழைந்த எதிர்ப்பாளர்கள் ஷூட்டிங்கிற்காக போட்டிருந்த செட்டுகளை உடைத்தும் பணியாளர்களைத் தாக்கியும் உள்ளனர். படப்பிடிப்பு உபகரணங்களையும் அவர்கள் சேதப்படுத்தினர். இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியும் அந்த தாக்குதலில் காயமடைந்தார்.

பத்மாவதி படத்தன் போஸ்டர் வெளியீட்டின்போதும் தீவைத்துக் கொளுத்தி தங்கள் எதிர்ப்புகளைக் காட்டினர். மேலும் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில் படம் வெளியானால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் இயக்குநருக்கு மிரட்டல் விடப்பட்டிருந்தது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஆகாஷ் மாலில் பத்மாவதி திரைப்படத்தின் டீசர் வெளியிட திட்டமிட்டப்பட்டது. டீசர் வெளியீட்டுக்கு எதிர்ப்பு வந்ததால், டீசர் வெளியிடப்படவில்லை.
இந்த நிலையில், ராஜ்புத் கார்னி சேனா அமைப்பைச் சேர்ந்த மகிபால் சிங் மக்ரானே என்பவர் வீடியோ ஒன்றில், ராஜ்புத் வம்சத்தை சேர்ந்தவர்கள் வீரமானவர்கள், பெண்களைத் தேவையில்லாமல் சீண்டமாட்டார்கள். இந்த படம் வெளியானால் ராமாயணத்தில் லக்ஷமணன், சூர்ப்பனகைக்கு என்ன செய்தானோ அதை நான், தீபிகா படுகோனுக்கு செய்வேன் இது சத்தியம் என்று மிரட்டில் விடுத்துள்ளார்.

இந்த படம் வெளியிடப்பட்டால், மாநிலத்தில் பெரும் போராட்டம் வெடிக்கும். எங்கள் முன்னோர்களின் வரலாறு களங்கமற்றது. அதை யாராவது களங்கப்படுத்த நினைத்தால் அவர்களின் ரத்தம் கொண்டே அந்த களங்கத்தைத் துடைப்போம் என்றும் அந்த வீடியோவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், படத்துக்கு யுஏ சான்றிதழ் தருவதாக ஒத்துக்கொண்டிருந்த தணிக்கைக்குழு, திடீரென பின்வாங்கியுள்ளது. தணிக்கை குழுவிற்கு அனுப்பிய விண்ணப்பம் நிறைவாக இல்லை என்றும் தணிக்கை குழு தெரிவித்துள்ளது.
பத்மாவதி திரைப்படம் பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் உள்ளதாலும், படத்துக்கு தணிக்கைகுழு சான்றிதழ் மறுத்துள்ளதாலும் டிசம்பர் 1 ஆம் தேதி ரிலீசாக இருந்த பத்மாவதி திரைப்படம் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் சஞ்சய் லீலா பன்சல் கூறியுள்ளார்.
