மத்திய அரசின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் கடந்த 50 நாட்களும் வங்கி ஊழியர்கள் கடுமையாக உழைத்தார்கள் என பிரதமர் மோடி பாராட்டிய இரு நாட்களில், அந்த 50 நாட்களில் கூடுதல் நேரம் பணியாற்றியதற்காக, ‘ஓவர்டைம்’ சம்பளம் வழங்க வேண்டும் என அரசுக்கு வங்கி ஊழியர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாட்டில் கருப்புபணம், கள்ளநோட்டுகளை ஒழிக்கும் வகையில், ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என பிரதமர் மோடி கடந்த நவம்பர் 8-ந்தேதி அறிவித்தார். அதைத்தொடர்ந்து, டிச30ந்தேதி வரை மக்கள் வங்கியில் செல்லாத ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய மக்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்த 50 நாட்களும் வங்கி ஊழியர்கள் கடுமையான பணியாற்றினர். வழக்கமான நேரத்தைக் காட்டிலும், கூடுதல் நேரம் வேலை செய்து, மக்களுக்கு இருக்கும் பணத்தை போதுமான அளவில் வினியோகம் செய்தனர். வங்கி ஊழியர்களின் பணியை பிரதமர் மோடியும் புத்தாண்டு தின உரையின் போது பாராட்டிப் பேசினார்.

இந்நிலையில், தங்கள் கூடுதல் பணிநேரத்தை ஒவர்டைம் ஆக கணக்கிட்டு ஊதியம் தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து பாரதிய ஜனதா கட்சியின் ஆதரவு பெற்ற பாரதிய மஸ்தூர் சங்கத்தின் வங்கி ஊழியர்களுக்கான தேசிய அமைப்பு பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில் கூறியிருப்பதாவது-

ரூபாய் நோட்டு தடை அறிவிக்கப்பட்டதில் இருந்து கடந்த 50 நாட்களும் வங்கி ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு அவர்களின் பணி நேரத்தைக் காட்டிலும் 12 முதல் 18 மணிநேரம் வேலை செய்தனர். சில வங்கிகள் மட்டுமே கூடுதல் பணிநேரத்தை ‘ஓவர்டைம்’ ஆக கணக்கிட்டு ஊதியம் வழங்க ஒப்புக்கொண்டது.

ஆதலால், அனைத்து வங்கி ஊழியர்கள் கூடுதலாக பணியாற்றிய நேரத்தை ‘ஓவர்டைம்’ ஆக கணக்கில் கொண்டு ஊதியம் அளிக்கவங்கி நிர்வாகத்துக்கு அறிவுரை கூற வேண்டும். வங்கிகளின் பல  பிரிவுகளில் ஆள்பற்றாக்குறை நிலவுகிறது. அதிலும் பணியாளர்களை நிரப்ப உத்தரவிட வேண்டும்.

அரசு ஊழியர்களை ஒப்பிடும்போது, வங்கிஊழியர்கள் குறைந்த ஊதியமே பெறுகின்றனர். ஆதலால், இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அளிக்கப்படும் ஊதிய உயர்வு நியாயமான அளவில் இருக்க வேண்டும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.