மத்திய பிரதேசத்தில் நடைபெற்ற கோட்மார் திருவிழாவில் இரு கிராம மக்கள் கற்களை வீசித் தாக்கிக் கொண்டதில் 934 பேர் காயமடைந்தனர். 400 ஆண்டுகளாக நடக்கும் இந்த பாரம்பரியத் திருவிழாவில், ஜாம் நதியின் இரு கரைகளிலும் உள்ள கிராம மக்கள் பங்கேற்றனர்.

மத்திய பிரதேச மாநிலம் பாண்டுர்ணா மாவட்டத்தில், இரண்டு கிராமங்களுக்கு இடையே நடைபெற்ற கல்வீச்சு திருவிழாவில், நூற்றுக்கணக்கான மக்கள் கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். ‘கோட்மார் திருவிழா’ என்ற பெயரில் நடக்கும் இந்தப் பாரம்பரியத் திருவிழாவில் 934 பேர் காயமடைந்துள்ளனர்.

ஜாம் ஆற்றின் இருபுறமும் உள்ள பாண்டுர்ணா மற்றும் சவர்கான் என்ற இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். கல்வீசித் தாக்கும் இந்தத் திருவிழா 400 ஆண்டுகளுக்கு மேலாக நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.

திருவிழா எப்படி நடக்கும்?

சனிக்கிழமை நடைபெற்ற இந்தத் திருவிழாவில், ஜாம் நதியின் இருகரைகளிலும் திரண்ட கிராம மக்கள், ஒருவரையொருவர் கற்களை வீசி எறிந்து தாக்கிக்கொண்டனர்.

இந்தத் திருவிழாவில், சவர்கான் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் காவ்லே குடும்பத்தினர் அருகில் உள்ள காட்டிலிருந்து ஒரு ‘பலாஸ்’ மரத்தைக் கொண்டுவந்து, நதியின் நடுவே நட்டனர். பின்னர் அந்த மரத்தின் உச்சியில் ஒரு கொடி ஏற்றப்பட்டது. உள்ளூர் சண்டி மாதா கோவிலில் பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, திருவிழா தொடங்கியது.

பாண்டுர்ணா கிராம மக்கள் நதியில் இறங்கி, மரத்தில் உள்ள கொடியை அகற்றுவதற்காக முன்னேறினர். அவர்கள் மீது சவர்கான் கிராமத்தினர் கற்களை வீசித் தாக்க, பாண்டுர்ணா கிராமத்தினரும் தங்கள் கிராம மக்களைப் பாதுகாக்க, சவர்கான் கிராமத்தினர் மீது கற்களை வீசினர்.

Scroll to load tweet…

900 க்கும் மேற்பட்டோர் காயம்

இப்படி சரமாரியாக கல்லெறிந்துத் தாக்கியதில் மொத்தம் 934 பேர் காயம் அடைந்துள்ளனர். காயம் அடைபவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முன்கூட்டியே பாண்டுர்ணாவில் 12 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டன. 58 மருத்துவர்கள் மற்றும் 200 மருத்துவ ஊழியர்கள் சிகிச்சை அளித்தனர்.

திருவிழாவின்போது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க சுமார் 600 போலீசார் குவிக்கப்பட்டனர். மாவட்ட நிர்வாகம் மக்கள் அனைவரும் கற்களை வீசித் தாக்காமல் திருவிழாவைக் கொண்டாடக் கேட்டுக்கொண்டது. இருப்பினும், இருபுறமும் இருந்து கற்கள் பறந்தன. இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை எந்தப் புகாரும் பதிவுசெய்யப்படாததால், வழக்கு எதுவும் பதிவுசெய்யப்படவில்லை என்று பாண்டுர்ணா காவல் நிலைய போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்தத் திருவிழா 400 ஆண்டுகள் பழமையானது என்று கிராம மக்கள் கூறுகின்றனர். 1955 முதல் 2023 வரை இந்தக் கல்வீச்சுத் திருவிழாவில் 13 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் போலீசார் கூறுகின்றனர்.