இந்தியாவில் அதிகரிக்கும் உறுப்பு தானம்: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்!
இந்தியாவில் உறுப்பு தானம் அதிகரித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்
இந்தியாவின் உறுப்பு தானம் கடந்த பத்தாண்டுகளில் குறிப்பிடத்தக்க வகையில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. 2013ஆம் ஆண்டில் 5,000 ஆக இருந்த உறுப்பு தானம் எண்ணிக்கை தற்போது 15,000 ஆக உயர்ந்துள்ளது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற 13ஆவது இந்திய உடல் உறுப்பு தான தின விழாவில் பேசிய மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா, ‘ஒருவருக்கு உயிரைக் கொடுப்பதை விட மனித குலத்திற்குச் செய்யும் பெரிய சேவை வேறு எதுவும் இருக்க முடியாது’ என தெரிவித்தார்.
உடல் உறுப்புகளை தானம் செய்வதற்கான துணிச்சலான முடிவை எடுத்ததற்காகவும், இறந்த உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காகவும், உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை துறையில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்களின் பங்களிப்பை அங்கீகரித்து அவர்களுக்கு விருது வழங்குவதற்காகவும் 13ஆவது இந்திய உடல் உறுப்பு தான நிகழ்ச்சி நடைபெற்றது.
அதில் உரையாற்றிய மன்சுக் மாண்டவியா, “இந்த முயற்சியின் ஒரு பகுதியாக இருந்த அனைத்து மக்களின் பங்களிப்பை அங்கீகரிப்பதும் பாராட்டுவதும் முக்கியம் என்று கூறினார். "2013 ஆம் ஆண்டில், சுமார் 5,000 பேர் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். இப்போது ஆண்டுக்கு 15,000 க்கும் மேற்பட்டவர்கள உறுப்பு தானம் செய்பவர்களாக உள்ளனர்.” என்று தெரிவித்தார்.
போலி கையெழுத்து: ராகவ் சத்தா மீதான புகாருக்கு ஆம் ஆத்மி விளக்கம்!
நாட்டில் உடல் உறுப்பு தானத்தை அதிகரிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவித்த அவர், உடல் உறுப்பு தானம் செய்வோருக்கான விடுப்பு காலம் 30 நாட்களில் இருந்து 60 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும், 65 வயது வரம்புகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், உடல் உறுப்பு தானம் செய்யும் செயல்முறை மேலும் நெறிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
நாட்டில் உடல் உறுப்பு தானத்தை பிரபலப்படுத்த மேலும் பல கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களைக் கொண்டு வர அரசு உறுதி பூண்டுள்ளது என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.
உடல் உறுப்பு தானம் செய்பவர்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சமூகத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் பங்களிப்பை பாராட்டிய டாக்டர் மாண்டவியா, அவர்களின் உந்துதல் மற்றும் அர்ப்பணிப்பைப் பாராட்டினார். இந்த நிலையில், உடல் உறுப்பு தானம் பெறுவோர் இந்த உன்னத சேவையை ஊக்குவிக்க வேண்டும் என்றும், மனித குல சேவைக்காக மற்றவர்களும் தங்கள் உடல் உறுப்புகளை தானம் செய்ய ஊக்குவிக்க வேண்டும் என்றும் அப்போது அமைச்சர் கேட்டுக்கொண்டார்.
“தானம் செய்யப்பட்ட ஒவ்வொரு உறுப்பும் விலைமதிப்பற்ற, உயிர்காக்கும் தேசிய வளமாகும். இறந்த நபர் உடல் உறுப்பு தானம் மூலம் எட்டு நபர்களுக்கு புதிய வாழ்க்கையை வழங்க முடியும் மற்றும் திசுக்களை தானம் செய்வதன் மூலம் இன்னும் பல உயிர்களை மேம்படுத்த முடியும்.” என்றும் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார்.