மணிப்பூர் விவகாரத்தில் தலையிட வேண்டும்: குடியரசுத் தலைவரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, எதிர்க்கட்சிகளின் கோரிக்கையைக் கேட்டு எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை என திருமாவளவன் தெரிவிக்கிறார்.
மூத்த எதிர்க்கட்சித் தலைவர்கள் புதன்கிழமை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைச் சந்தித்து, மணிப்பூரில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மீண்டும் நிலைநாட்ட அவரது தலையீட்டைக் கோரினர். சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக மணிப்பூரில் நிலைமை ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளது என்று அவர்கள் வாதிட்டனர்.
எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள் இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றுவந்துள்ளனர். வன்முறையால் நிலைகுலைந்திருக்கும் அந்த மாநிலத்தில் நிவாரண முகாம்களுக்குச் சென்ற அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து உரையாடியுள்ளனர். அவர்கள் தங்கள் சுற்றுப்யணத்தின் அறிக்கையுடன் குடியரசுத் தலைவரை இன்று காலை 11.30 மணி அளவில் சந்தித்தனர்.
"மணிப்பூரில் ஒரு அசாதாரண சூழல் நிலவுகிறது. மணிப்பூரில் குறித்து நாடாளுமன்றத்தில் உடனடியாக உரையாற்ற பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். அதைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும்" என்று குடியரசுத் தலைவரிடம் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
"ஆன்லைனில் வெளிவந்த அதிர்ச்சியூட்டும் வைரல் வீடியோ தேசத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, மேலும் மாநில நிர்வாகமும் காவல்துறையும் இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டன என்பது தெளிவாகத் தெரிகிறது. குற்றம் சாட்டப்பட்டவரைப் பிடித்து கைது செய்ய இரண்டு மாதங்களுக்கும் மேலாக தாமதமானது பிரச்சினையின் தீவிரத்தை அதிகப்படுத்தியுள்ளது. பெண்களுக்கு எதிரான பல வன்கொடுமைகள் நடந்துள்ள நிலையில் மேற்படி சம்பவம் ஒன்று மட்டுமே தெரியவந்துள்ளது'' என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில், இந்தச் சந்திப்புக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும் விசிக தலைவருமான திருமாவளவன், பிரதமர் மோடி மணிப்பூர் செல்ல வேண்டும் எனவும் நாடாளுமன்றத்தில் பிரதமர் மணிப்பூர் குறித்து உரையாற்றி, விவாதம் நடத்தப்பட்ட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்தார். மேலும், பிரதமருக்கு குடியரசுத் தலைவர் அழுத்தம் கொடுக்கவும் வலியுறுத்தியதாகக் குறிப்பிட்டார்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட தலைவர்கள் கூறியதை மிகுந்த பொறுமையுடன் கேட்டுக்கொண்ட குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, வெறுமனே தலையசைத்து விடைபெற்றார் எனவும் எந்த வாக்குறுதியும் கொடுக்கவில்லை எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அதிக லாபம் ஈட்டும் சென்னை விமான நிலையம்! நாட்டிலேயே 2வது இடம் பிடித்து அசத்தல்!