நாடுமுழுவதும் சரக்கு மற்றும் சேவை வரி(ஜி.எஸ்.டி.) ஜூலை 1-ந்தேதி அமலுக்கு வருகிறது.

இதையொட்டி நாளை (30-ந்தேதி)நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் ஜி.எஸ்.டி. அறிமுக சிறப்பு நிகழ்ச்சியை நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ள நிலையில் அதைப் புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜி.எஸ்.டி. அமல்

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை நாடுமுழுவதும் ஜூலை 1-ந் தேதி நடைமுறைக்கு வருகிறது. வரிவிதிப்பு முறையில் மிகப்பெரிய சீர்திருத்தத்தை நோக்கி தேசம் நகர்கிறது.

நள்ளிரவு நிகழ்ச்சி

அதையொட்டி, 30-ந்தேதி இரவு நாடாளுமன்றத்தில் கூட்ட அரங்கில் மிகப்பெரிய அளவிலான நிகழ்ச்சியை நடத்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் பிரதமர் தேவகவுடா உள்ளிட்டோருக்கு அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்து எம்.பி.க்கள், மாநில முதல்வர்கள் கலந்து கொள்ளவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

புறக்கணிக்க முடிவா?

ஆனால், இந்த நிகழ்ச்சியை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் ஆலோசித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இடது சாரி கட்சித் தலைவர் ஒருவர் கூறுகையில், “ அரசின் நிர்வாக எந்திரமே ஜி.எஸ்.டி. வரிக்கு இன்னும் முறையாகத் தயாராகவில்லை. அதற்குள் அரசு ஏன் ஜி.எஸ்.டி.வரியை நடைமுறைப்படுத்த ஏன் அவசரப்படுகிறது.

கலந்து கொள்ளமாட்டோம்

எதிர்க்கட்சிகளின் பெரும்பான்மையான கருத்து என்னவென்றால், நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் நடக்கும் ஜி.எஸ்.டி. அறிமுக நிகழ்ச்சயில் யாரும் கலந்து கொள்ளக்கூடாது, கூட்டத்திலும் கலந்து கொள்ளக்கூடாது என்பதுதான்.

பொழுதுபோக்கல்ல

ஜி.எஸ்.டி.வரியை நடைமுறைப்படுத்துவதற்கு முன் மத்தியஅரசு என்ன மாதிரி எல்லாம் தயாராகி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த வரிக்கு எதிராக வர்த்தகர்களும், தொழில்துறையினரும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதை பொழுதுபோக்காக நடைமுறைப்படுத்த முடியாது. இதனால், மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். இதுதான் எதிர்க்கட்சிகளின் கருத்தாக இருக்கிறது’’ எனத் தெரிவித்தார்.

முன்னதாக மார்க்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், “ ஜி.எஸ்.டி. காங்கிரஸ் அரசு அறிமுகம் செய்யும் போது எதிர்த்த பா.ஜனதா கட்சி, இப்போது அதே ஜி.எஸ்.டி.

வரியை எதிர்க்க ஏன் அவசரம் காட்டுகிறது’’ என்று கேட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.