ஓப்பன்ஹெய்மர் சர்ச்சை: அதிகாரிகள் மீது பாயும் நடவடிக்கை?
ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தின் சில காட்சிகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பந்தப்பட்ட சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
உலகின் முதல் அணுகுண்டை உருவாக்கியவராக கருதப்படும் ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் அணுகுண்டின் தந்தை என்று அழைக்கப்படுகிறார். இவரது வாழ்க்கையை அடிப்படையாக கொண்ட ஓப்பன்ஹெய்மர் என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது. கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள இப்படம் உலகம் முழுவதும் கடந்த 21ஆம் தேதி வெளியாகி வசூலை குவித்து வருகிறது. கிறிஸ்டோபர் நோலனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன.
ஆனால், கிறிஸ்டோபர் நோலனின் ஓப்பன்ஹெய்மர் படம் இந்தியாவில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இந்தியாவில் அப்படத்தில் இடம்பெற்ற பல காட்சிகள் வெட்டப்பட்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட சில காட்சிக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.
ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தில் இடம் பெறும் அந்தரங்க காட்சி ஒன்றில், நாயகனும், நாயகியும் பேசுவதுதான் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த சர்ச்சைக்குரிய காட்சியில், ஓப்பன்ஹெய்மராக வரும் நடிகர் சிலியன் மர்பி, மனநல ஆலோசகர் ஜீன் டாட்லருடன் தனிமையில் இருக்கிறார். அப்போது, “உலகங்களை அழிக்கும் மரணமாக மாறிவிட்டேன்.” என்ற வாசகங்கள் இடம்பெறுகின்றன. இந்த வரிகள் இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதையில் இருந்து எடுக்கப்பட்டவை எனக் கூறி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மழைக்காலக் கூட்டத்தொடர்: ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சஸ்பெண்ட்!
அந்த காட்சியை கத்தரிக்காமல் விட்டது ஏன் என்று சென்சார் போர்டுக்கு பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், ஓப்பன்ஹெய்மர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள சர்ச்சைக் காட்சிகளை நீக்குமாறு அறிவுறுத்தியுள்ள விளையாட்டு, இளைஞர் விவகாரங்கள் மற்றும் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், குறிப்பிட்ட அந்த காட்சிகள் இடம் பெற்றது எப்படி என சென்சார் போர்டிடம் இருந்து விளக்கம் கேட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு ஒப்புதல் அளித்த சென்சார் போர்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.