மழைக்காலக் கூட்டத்தொடர்: ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., சஸ்பெண்ட்!
ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது. ஆகஸ்ட் மாதம் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதலே, மணிப்பூர் வன்முறை தொடர்பாக இரு அவைகளிலும் ஆளும் பாஜக அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங், மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவையின் மையப்பகுதிக்கு சென்று முழக்கங்களை எழுப்பிய சஞ்சய் சிங்கை திரும்பிப் போக சொல்லி சபாநாயகர் எச்சரித்த போதிலும், அதனை ஏற்க மறுத்து அமளியில் ஈடுபட்டதற்காக சஞ்சய் சிங் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
டெல்லியின் அதிகாரத்துவக் கட்டுப்பாடு குறித்த மத்திய அரசின் அவசரச் சட்டம் குறித்து பாஜகவுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், சஞ்சய் சிங்கின் இடைநீக்கத்துக்கு ஆம் ஆத்மி கட்சி கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. ராஜ்யசபாவில் எதிர்க்கட்சிகளின் வலுவான குரலாக அவர் இருப்பதாகவும், வாய்ப்பு கிடைத்தால் அவரை பாஜக சிறையில் அடைத்திருக்கும் எனவும் அக்கட்சி கூறியுள்ளது.
“சஞ்சய் சிங் முழக்கங்களை எழுப்பும் போது, ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைகின்றன. பாஜக அரசுக்கு அவர் சிம்ம்சொப்பனமாக உள்ளார். அவரது குரலை அடக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால் அவர்கள் என்ன செய்தாலும், இது போன்ற வித்தைகள் எங்களிடம் பலிக்காது. சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற புலனாய்வு அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தினாலும், பாஜக அரசாங்கம் மீண்டு வருவது கடினம். இதனை நாங்கள் சட்டப்படி எதிர்கொள்வோம்” என ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி அமைச்சருமான சுரப் பரத்வாஜ் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு பிரதமர் மோடி ஆப்சென்ட்: இரு அவைகளும் ஒத்தி வைப்பு!
ஒரு மணி நேரம் ஒத்திவைக்கப்பட்ட ராஜ்யசபா நடவடிக்கைகள் மதியம் மீண்டும் தொடங்கியபோது, கேள்வி நேரத்தை தொடங்க மாநிலங்களவை தலைவர் அனுமதித்தார். அப்போது, மணிப்பூரில் நடந்த வன்முறைகள் குறித்து விரிவான விவாதம் கோரி, 267 விதியின் கீழ் நோட்டீஸ் சமர்பித்துள்ளதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் பலர் சுட்டிக்காட்டினர். பிரதமர் அவைக்கு வந்து அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் விவாதத்தை தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, ராஜ்யசபா தலைவர் ஜக்தீப் தன்கர் கேள்வி நேரத்தை தொடர அனுமதித்தார். ஜல் சக்தி அமைச்சர் கஜேந்திர ஷெகாவத் தனது அமைச்சகம் தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்த போது, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் சபையின் மையப் பகுதிக்கு வந்து முழக்கங்களை எழுப்ப தொடங்கினார். 267 விதியின் கீழ் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விவாதம் நடத்தக் கோரியபோது, கேள்வி நேரத்தை தொடர அனுமதித்ததற்கு சஞ்சய் சிங் எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து, சஞ்சய் சிங்கை திரும்பிப் போக சொல்லி மாநிலங்களவை தலைவர் எச்சரித்த போதிலும், அதனை ஏற்க மறுத்து சஞ்சய் சிங் அமளியில் ஈடுபட்டார்.
இதையடுத்து, ராஜ்யசபாவின் ஒழுக்கம் மற்றும் நடத்தை விதிகளை மீறுவதாகக் கூறி, அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு மாநிலங்களவை தலைவரை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார். அவரை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தையும் அவர் முன்வைத்தார். அந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, மழைக்காலக் கூட்டத்தொடர் முழுவதும் சஞ்சய் சிங் இடைநீக்கம் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவர் அறிவித்தார்.