ஆபரேஷன் அஜய்: இந்தியர்களை ஏற்றிக் கொண்டு கிளம்பும் முதல் விமானம்!
ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை ஏற்றிக் கொண்டு முதல் விமானம் இன்று இரவு கிளம்பவுள்ளது
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் இஸ்ரேல் படையினர் அல் அக்சா மசூதி மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாலஸ்தீனத்தின் காசா பிராந்தியத்தை சேர்ந்த ஹமால் போராளிக் குழுவினர், இஸ்ரேல் மீது தீடீர் தாக்குதல் நடத்தினர். இதனை சற்றும் எதிர்பாராத இஸ்ரேல் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
தொடர்ந்து ஹமாஸ் அமைப்பினர் மீது பதில் தாக்குதலை தொடங்கியுள்ள இஸ்ரேல், போர் தொடங்கியுள்ளதாகவும் அறிவித்துள்ளது. ஏற்கனவே திறந்தவெளி சிறையான காசா மீது முழு முற்றுகையையும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் காரணமாக அங்கு ஏராளமான இந்தியர்கள் அங்கு சிக்கியுள்ளனர். இஸ்ரேலில் மட்டும் சுமார் 20,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசிக்கலாம் என தெரிகிறது. இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை அடுத்து அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. இதன் காரணமாக டெல்லியில் இருந்து டெல் அவிவ் நகருக்கு இயக்கப்பட்டு வந்த விமான சேவையை இந்தியா தற்காலிகமாக ரத்து செய்தது. இதனால், அங்கு சிக்கியுள்ள இந்தியர்கள் தாயகம் திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டது.
அமுலை தொடர்ந்து நந்தினி: ஆவினுக்கு அடுத்த ஆபத்து - என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?
இதனை கருத்தில் கொண்டு, போரில் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ள மத்திய அரசு, ஆபரேஷன் அஜய் திட்டத்தை தொடங்கி உள்ளது. இதன்மூலம் அங்குள்ள இந்தியர்கள் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட உள்ளனர். அதன்படி, ஆபரேஷன் அஜய் திட்டத்தின் கீழ் இஸ்ரேலில் இருந்து இந்தியர்களை ஏற்றிக் கொண்டு முதல் விமானம் இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தில் இருந்து இன்று இரவு 9 மணியளவில் கிளம்பவுள்ளது.
இந்த விமானத்தில் சுமார் 230 இந்தியர்கள் அழைத்து வரப்படவுள்ளனர். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் இவர்கள் அழைத்து வரப்படவுள்ளனர். இந்த விமானம் நாளை காலை டெல்லியை வந்தடையும். முதல் சிறப்பு விமானத்தில் இடம் கிடைக்காதவர்கள் அடுத்தடுத்து இயக்கப்படும் விமானங்களில் அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 6ஆவது நாளாக போர் தொடரும் நிலையில், 189 ராணுவ வீரர்கள் உட்பட 1,200 பேர் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 2007ஆம் ஆண்டு முதல் ஹமாஸ் அமைப்பினர் ஆட்சி செய்து வரும் காசாவில், குறைந்தது 1,200 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அங்குள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.