அமுலை தொடர்ந்து நந்தினி: ஆவினுக்கு அடுத்த ஆபத்து - என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?
கர்நாடகாவின் நந்தினி பால் நிறுவனம் தனது வர்த்தகத்தை தமிழகத்தில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கர்நாடகா பால் கூட்டுறவு அமைப்பின் சார்பாக நந்தினி என்ற பெயரில் பால், பால் பொருட்கள் ஆகியவை விற்பனை செய்யப்படுகின்றன. தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் போல், குஜராத்தின் அமுல் நிறுவனம் போல், கர்நாடகாவில் நந்தினி இருக்கிறது.
கடந்த கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தலின் போது, நந்தினியை காப்பேம் என்ற பிரசாரம் பெரிதாக முன்வைக்கப்பட்டது. காரணம், குஜராத்தின் அமுல் நிறுவனம் கர்நாடகாவில் அதன் வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிட்டதுதான். அமுல், நந்தினி ஆகிய இரண்டும் இணைந்து செயல்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேச, விவகாரம் பெரிதானது. கர்நாடக தேர்தல் களம் நந்தினியை வைத்து சூடுபிடித்தது.
அந்த வகையில், கர்நாடகாவின் நந்தினி பால் நிறுவனம் தனது வர்த்தகத்தை தமிழகத்தில் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழ்நாட்டில் உள்ள மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம், நாமக்கல், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை விற்பனை செய்ய, வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட விருப்பமுள்ளவர்கள் அக்டோபர் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அந்நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.
தமிழ்நாடு அரசின் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆவின் நிறுவனம், 4.20 லட்சம் பால் உற்பத்தியாளர்கள் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக 36 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்து, 30 லட்சம் லிட்டர் பாலை நாள்தோறும் நுகர்வோருக்கு தமிழ்நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
ஆனால், ஆவின் நிறுவனம் உரிய கொள்முதல் விலையை கொடுக்கவில்லை எனவும், பால் கொள்முதலை உயர்த்த ஆவின் மறுக்கிறது எனவும் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்கள் தொடர் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வரும் நிலையில், கர்நாடகாவின் நந்தினி பால் தமிழ்நாட்டுக்குள் நுழையவுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டுக்கும் கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நதி நீரில் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது. தமிழக விவசாய நிலங்கள் வறண்டு போனாலும், தண்ணீர் தரமாட்டோம் என விடாப்படியாக கர்நாடகா உள்ளது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் நந்தினி நிறுவனம் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்துவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஆவின் நிறுவனம் உரிய கொள்முதல் விலையை கொடுக்க தவறியது, தொடர் முறைகேடுகள் குற்றச்சாட்டுகளின் விளைவாகவே நந்தினி நிறுவனம் தன்னுடைய வர்த்தகம் நடவடிக்கை விரிவுபடுத்துகிறது என்று தமிழ்நாட்டைச் சேர்ந்த விவசாய சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.
முன்னதாக, குஜராத்தின் அமுல் நிறுவனம் தமிழகத்திl ஏற்கனவே தனது கடையை போட்டு விட்டது. அமுல் நிறுவனம், இதுநாள் வரையில் தங்களது தயாரிப்புகளை தமிழ்நாட்டில் உள்ள அவர்களுடைய விற்பனை நிலையங்கள் வாயிலாக மட்டுமே விற்பனை செய்து வந்த நிலையில், தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில், குளிரூட்டும் மையங்கள் மற்றும் பதப்படுத்தும் நிலையத்தை நிறுவியுள்ளது.
சத்தீஸ்கர் தேர்தல்: தேர்தல் ஆணையம் உத்தரவு!
மேலும், கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பால் உற்பத்தியாளர்கள் மற்றும் சுய உதவிக் குழுக்கள் மூலம் பால் கொள்முதல் செய்யவும் துவங்கியுள்ளது. இதனால், பலரும் அமுலுக்கு பாலை கொடுக்கத் தொடங்கி விட்டனர், இதுதொடர்பாக, கண்டனம் தெரிவித்த முதல்வர் ஸ்டாலின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியதினார். அதன்பிறகு எந்த முன்னேற்றமும் தெரியவில்லை.
அமுல் கர்நாடகாவுக்குள் நுழைந்த போது, நந்தினியை காக்க அம்மாநிலமே ஒன்று திரண்டது. பிற மாநில நிறுவனம் நுழைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கர்நாடகாவின் நந்தினி தற்போது தமிழகத்தில் தனது வர்த்தகத்தை விரிவுபடுத்த திட்டமிடுகிறது. இதில், தமிழக அரசு உடனடியாக தலையிட வேண்டும் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர். அமுல், நந்தினி பால் வந்தால் தமிழ்நாட்டின் ஆவினுக்கு பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை மணி ஒலிக்கப்படுகிறது.