கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற வெங்காயம் சாகுபடி நடைபெறும் மாநிலங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் பெய்த எதிர்பாராத கனமழையால் வெங்காய சாகுபடி கடுமையாக பாதித்தது. 

உற்பத்தி குறைந்ததால் சப்ளை பாதித்தது. இதனால் சந்தைக்கு வரத்து குறைந்ததால் வெங்காயத்தின் விலை மளமளவென ஏற்றம் கண்டது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.200 வரை விற்பனை செய்யப்பட்டது.


வெங்காய விலை உயர்வை கட்டுபடுத்த ஏற்றுமதிக்கு தடை, வர்த்தகர்கள் கையிருப்பு வைக்க உச்ச வரம்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை  மத்திய அரசு எடுத்தது. 

மேலும், தன் கைவசம் வைத்திருந்த இடர்பாடு சமாளிப்பு கையிருப்பிலிருந்து வெங்காயத்தை நாட்டின் பல பகுதிகளுக்கு சப்ளை செய்தது. இந்த ஆண்டு 59 ஆயிரம் டன் வெங்காயத்தை இடர்பாடு சமாளிப்பு கையிருப்பாக வைத்திருந்தது. 

ஆனால் உள்நாட்டு தேவையை ஒப்படும்போது மத்திய அரசின் இடர்பாடு சமாளிப்பு கையிருப்பு போதுமானதாக இல்லை.  இதனால் மத்திய அரசு வெங்காயத்தை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது. மேலும் வெங்காயத்தை இறக்குமதி செய்யவதற்கான ஆர்டர்களையும் வழங்கியது.


அண்மையில் நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சர் தலைமையிலான அமைச்சர்கள் குழு கூட்டத்தில் வெங்காயம் விவகாரம் விவாதிக்கப்பட்டது. 

அப்போது 2020ம் ஆண்டில் இடர்பாடு சமாளிப்பு கையிருப்பாக 1 லட்சம் டன் வெங்காயம் கையிருப்பு வைக்க முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இடர்பாடு சமாளிப்பு கையிருப்பு உருவாக்குவதற்காக மத்திய அரசு சார்பாக கூட்டுறவு நாபெட் விவசாயிகளிடமிருந்து நேரடியாக வெங்காயத்தை கொள்முதல் செய்யும்.