பதிண்டாவில் மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழப்பு; தற்கொலையா?
பதிண்டா ராணுவ நிலைய துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் நான்கு ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சில மணிநேரங்களுக்குப் பிறகு, புதன்கிழமை மாலை மேலும் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என்ற போர்வையிலும் பார்க்கப்படுகிறது.
"நேற்று மாலை பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் ஒரு ராணுவ வீரர் காயமடைந்து இறந்தார். இறந்த வீரர் லகு ராஜ் சங்கர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்" என்று பதிண்டா கன்ட்டோன்மென்ட் காவல் நிலைய அதிகாரி குர்தீப் சிங் தெரிவித்துள்ளார். மேலும் நேற்று நடந்த தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டுக்கும் நேற்று மாலை நடந்த சம்பவத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
''பதிண்டா ராணுவ நிலையத்தில் ஒரு வீரர் ஏப்ரல் 12ஆம் தேதி மாலை சுமார் 4:30 மணியளவில் துப்பாக்கி குண்டு காயங்கள் ஏற்பட்டு உயிரிழந்தார். அந்த வீரர் தனக்கு வழங்கப்பட்டு இருந்த துப்பாக்கியுடன் பணியில் இருந்தார். அந்த துப்பாக்கியில் இருந்து வெளியான துப்பாக்கிக் குண்டு அவரது உடலுக்கு அருகில் இருந்து எடுக்கப்பட்டது. அவர் உடனடியாக ராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்" என்று ராணுவம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த ராணுவ வீரர் ஏப்ரல் 11ஆம் தேதி தான் விடுப்பில் இருந்து பணிக்கு திரும்பியுள்ளார். இது தற்கொலையாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று அதிகாலை ராணுவ வீரர்கள் முகாமில் உறங்கிக் கொண்டு இருக்கும்போது திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் பலியாகி இருந்தனர். அதிகாரிகளின் மெஸ் இருக்கும் இடத்தில் இருந்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு இருந்தது. வீரர்கள் சுதாரித்துக் கொண்டு எதிர்தாக்குதல் நடத்தியதால், நிகழவிருந்த பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது.
பஞ்சாப் பதிண்டா துப்பாக்கி சூடு.! தமிழகத்தை சேர்ந்த 2 ராணுவ வீரர்கள் பலி- சோகத்தில் உறவினர்கள்