அன்றே சொன்ன ராகுல் காந்தி... பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிபந்தனையற்ற ஆதரவு! வைரலாகும் பழைய கடிதம்
பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவைக் கொண்டுவந்தால் காங்கிரஸ் கட்சி அதற்கு ‘நிபந்தனையற்ற ஆதரவு’ அளிக்கும் என்று ராகுல் காந்தி 2018ஆம் ஆண்டு எழுதிய கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டதற்கு காங்கிரஸ் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்த சட்டதிருத்த மசோதா, நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றத்திலும் மாநில சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.
இந்நிலையில், பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவைக் கொண்டுவந்தால் அதற்கு ‘நிபந்தனையற்ற ஆதரவு’ அளிப்பதாக காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எழுதிய பழைய கடிதம் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது. காங்கிரஸ் எம்பி ஜெய்ராம் ரமேஷ் ரீட்வீட் செய்த அந்தக் கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
"எங்கள் பிரதமர், தன்னை பெண்களுக்கு அதிகாரமளிக்க போராடுபவர் என்று கூறிக்கொள்கிறார். அவர் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, தன் பேச்சை செயலுக்குக் கொண்டுவந்து, நாடாளுமன்றத்தில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்கான நேரம் இது. காங்கிரஸ் அவருக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கும்" என ராகுல் காந்தி 2018ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1996ஆம் ஆண்டு முதல் பெண்களுக்கான சட்டமன்ற இடஒதுக்கீட்டிற்கான சட்டத்தை உருவாக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவை அனைத்தும் தோல்வியடைந்தன. 2010ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் மாநிலங்களவையில் மட்டும் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆனால் அப்போது சில கூட்டணிக் கட்சிகளின் அழுத்தம் காரணமாக அதை மக்களவையில் தாக்கல் செய்ய முடியவில்லை.
இந்த மசோதாவை பாஜக ஆதரித்ததையும், அப்போதைய மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி அதை ‘வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது’ என்று கூறியிருந்ததையும் ராகுல் காந்தி தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளானார்.
இருப்பினும், இப்போது கொண்டுவரப்பட உள்ள புதிய மசோதா 2010 மசோதாவை ஒத்ததாக இருக்காது என்றும், இடஒதுக்கீட்டின் நோக்கம் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு அப்பால் விரிவடையும் வாய்ப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது. பல பிராந்தியக் கட்சிகளின் முக்கிய கோரிக்கையான உள் ஒதுக்கீட்டுக்கான ஏற்பாடு பற்றி முந்தைய மசோதாவில் குறிப்பிடவில்லை. புதிய மசோதாவில் அது இடம்பெறக்கூடும்.
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன், எதிர்க்கட்சித் தலைவர்கள், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை வலியுறுத்தினர். இதற்கிடையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, நாடாளுமன்ற பிரதிநிதிகளில் பெண்களின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டிப் பேசினார். நாடாளுமன்றத்தில் 14% பேர் மட்டுமே பெண்கள் என்றும் மாநில சட்டசபைகளில் இந்த எண்ணிக்கை வெறும் 10% மட்டுமே என்றும் அவர் எடுத்துக்கூறினார்.
காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளின் ஆதரவாக இருப்பதால், மக்களவையில் 431 எம்பிக்களும், மாநிலங்களவைவில் 175 எம்பிக்களும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் மசோதா சுமூகமாக நிறைவேறும் வாய்ப்பு உள்ளது.
முழுவதும் இந்தியில் தான் இருக்கு... ஆத்திரத்தில் நிகழ்ச்சி நிரலை கிழித்தெறிந்த திருச்சி சிவா