Asianet News TamilAsianet News Tamil

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உலகளவிய சக்தியாக இந்தியா உருவெடுத்தது எப்படி?

சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் சுற்றுச்சூழல், பருவநிலை பாதுகாப்பில் இந்தியா எப்படி உலகளாவிய சக்தியாக உருவெடுத்துள்ளது என்பது குறித்து காணலாம்.
 

On this independence day How India has emerged as a front runner in  Environment climate change Protection
Author
First Published Aug 7, 2023, 11:51 AM IST

ஆகஸ்ட் 15ஆம் தேதி 76ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட இந்தியா தயாராகி வரும் நிலையில், நாடு கடந்த 76 ஆண்டுகளில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் திசையில் அதிகமாக உழைத்துள்ளது. அத்துடன், சூரிய சக்தியைப் பயன்படுத்துவதன் மூலம் காலநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் சர்வதேச சோலார் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளையும்  இந்தியா எடுத்து வருகிறது.

காலங்காலமாக, சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற கருத்து இந்திய கலாச்சாரத்தில் வேரூன்றி உள்ளது. காற்று மாசுபாடு, நீர் மாசுபாடு, புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் போன்ற சுற்றுச்சூழல் பிரச்சினைகளை சமாளிக்க பல சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளை கொண்டு வருவதன் மூலம் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் அதன் பழமையான கலாச்சாரத்தை சுதந்திர இந்தியா பின்பற்றி வருகிறது.

1972 ஆம் ஆண்டு நாட்டில் தாவரங்கள் மற்றும் விலங்கு இனங்களின் பாதுகாப்பிற்காக வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது. சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான பாதையில் சுதந்திர இந்தியா எடுத்த முதல் பெரிய படி இதுவாகும். அதன்பிறகு, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972, நீர் (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டம், 1974, வனப் பாதுகாப்புச் சட்டம், 1980, சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986, ஒலி மாசுபாடு (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 2000, ஓசோன்-குறைக்கும் பொருட்கள் (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) விதிகள், 2000, உயிரியல் பன்முகத்தன்மை சட்டம், 2002, பட்டியல் பழங்குடியினர் மற்றும் பிற பாரம்பரிய வனவாசிகள் (வன உரிமைகள் அங்கீகாரம்) சட்டம், 2006 (FRA), தேசிய பசுமை தீர்ப்பாயம் சட்டம் (NGT), 2010, அபாயகரமான கழிவு மேலாண்மை விதிமுறைகள், 2016 மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம் (CRZ) அறிவிப்பு 2018 என சுற்றுச்சூழலை பாதுகாக்க ஏராளமான சட்டங்களை இந்தியா இயற்றியுள்ளது.

சுற்றுச்சூழல் வழக்குகளைக் கையாள்வதற்கும் விரைவான தீர்வு வழங்குவதற்கும், 2010 இல் இந்தியாவில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (NGT) உருவாக்கப்பட்டது. இந்த நடவடிக்கை சுதந்திரத்திற்குப் பிறகு சுற்றுச்சூழல் வழக்குகளைத் தீர்ப்பதில் எடுக்கப்பட்ட முக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாகும், ஏனெனில் இது சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக நிலங்களில் திறந்தவெளியில் கழிவுகளை எரிப்பதைத் தடை செய்வது உட்பட பல்வேறு சிறப்புமிக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளது.

பருவநிலை மாற்றம் உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக  உள்ள நிலையில், உலக அளவில் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா முன்னணியில் உள்ளது. பசுமை எரிசக்தி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றுக்கு மாறும் செயல்திட்டத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. பருவநிலை மாறுபாடு குறித்த செயல் குறியீட்டில், இந்தியா தற்போது  முதல் 5 நாடுகளுக்குள் இடம் பெற்றுள்ளது.

பெட்ரோலில் எத்தனால் கலப்பு 2013-14 ஆம் ஆண்டில் 1.53 சதவீதமாக இருந்தது. 2022 ஆம் ஆண்டில் இது 10.17 சதவீதமாக உயர்ந்துள்ளது. 2025-26-ம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பை அடைய வேண்டும் என்ற இலக்குடன் இந்தியா செயல்பட்டு வருகிறது. இது நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை அதிகரிப்பது மட்டுமின்றி, அந்நிய  செலாவணி சேமிப்பாக ரூ. 41,500 கோடியை மிச்சப்படுத்தும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. அத்துடன் 27 லட்சம் மெட்ரிக் டன் பசுமைக் இல்ல வாயு உமிழ்வைக் குறைக்கும். மேலும், 5 இடங்களில் 2ஜி எத்தனால் உயிரி சுத்திகரிப்பு  ஆலைகளை  அரசு  நிறுவி வருகிறது.

அத்துடன், 2005 முதல் 2030ஆம் ஆண்டிற்குள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் உமிழ்வு தீவிரத்தை 45 சதவீதமாகக் குறைக்க இந்தியா உறுதி பூண்டுள்ளது. 2030ம் ஆண்டிற்குள், நாட்டின் 50 சதவீத மின் உற்பத்தித்திறனை, புதைப்படிவமற்ற எரிபொருள் அடிப்படையிலான  எரிசக்தி மூலம் பூர்த்தி செய்ய  இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பல்வேறு எரிசக்தி சேமிப்புத் திட்டங்கள் வாயிலாக, நாட்டின் கார்பன் உமிழ்வு ஆண்டுக்கு 267.9 மில்லியன் டன்னாக இருக்கிறது. இதன்மூலம், 18.5 பில்லியன் டாலர் நிதி சேமிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பசுமை புரட்சி முதல் உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் வரை: சுதந்திர இந்தியாவின் வளர்ச்சி!

காடுகள் மற்றும் விலங்குகளைப் பாதுகாப்பதிலும் இந்தியா கவனம் செலுத்தி வருகிறது. 1970இல் இந்தியாவின் தேசிய பூங்காக்கள் எண்ணிக்கை 5ஆக இருந்தது. இது தற்போது 100க்கும் மேல் அதிகரித்துள்ளது. விளிம்பில் இருந்த புலிகளின் எண்ணிக்கை, மீண்டு வருகிறது. உலகில் 75 சதவீத புலிகள் இந்தியாவில் உள்ள நிலையில், ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற அடிப்படையில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புலிகள் காப்பகங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஈரநிலப் பகுதிகளைப் பாதுகாக்கும் பொருட்டு, ராம்சார் மாநாட்டின் கீழ், சீனாவுடன் இணைந்து, மே 2022 நிலவரப்படி மொத்தம் 75 ஈரநிலங்கள் ராம்சார் தளங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் இந்தியா ஆசியாவில் 1வது இடத்தில் உள்ளது.

இந்தியாவில் சுற்றுசூழல் மாசுபாட்டின் முக்கிய காரணிகளில் ஒன்று பிளாஸ்டிக். இந்தியர்கள் ஆண்டுக்கு சுமார் 3.5 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகளை உருவாக்குகிறார்கள். இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் பொருட்டு, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கை இந்திய அரசு தடை செய்துள்ளது. இது பிளாஸ்டிக் கழிவுகளை வெகுவாகக் குறைப்பது மட்டுமல்லாமல், சுற்றுச்சூழலையும் பாதிக்கும்.

சுதந்திரத்தின் போது அறிவியல் ரீதியாக வளர்ச்சியடையாத நாடாக இந்தியா இருந்து. ஆனால், தூய்மையான ஆற்றலை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டு, இந்தியாவின் நிறுவப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் உலகில் நான்காவது பெரியது. நாட்டில் மொத்தம் 150.54 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் (பெரிய ஹைட்ரோ ஆலைகள் உட்பட) நிறுவப்பட்டது. 

சூரிய மின் உற்பத்தியில் கவனம் செலுத்து வருவதற்கிடையே, பசுமை ஆற்றலைப் பயன்படுத்துவதை ஊக்குவிக்க இந்தியா நீர்மின்சாரத்தையும் பயன்படுத்துகிறது. 2016 இல் 4.2 ஜிகாவாட்டாக இருந்த சிறிய நீர்மின் நிலையங்களின் நிறுவப்பட்ட திறன் 4.8 ஜிகாவாட்டாக அதிகரித்துள்ளது. இது புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் நிர்ணயிக்கப்பட்ட 5 ஜிகாவாட் இலக்கை நெருங்கி வருகிறது. 

இந்தியாவில் முதல் மின்சார வாகனம் 1996 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டதில் இருந்து அது கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இப்போது 1.5 மில்லியன் இ-ரிக்ஷாக்கள் உள்ளன. மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனை 130 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளன. இதன் மூலம், பசுமை இல்ல வாயுக்கள், கார்பன் உமிழ்வுகள் ஆண்டுதோறும் குறைக்க வழிவகை செய்யப்படுகிறது. இந்த நடவடிக்கை, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை வேகமாக பின்பற்றுவதைக் குறிக்கிறது. 

புதுப்பிக்கத்தக்க ஆற்றலைப் பயன்படுத்துவதில் பல வளர்ந்த நாடுகளை விட இந்தியா முன்னேறியுள்ளது. உலகளவில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறனை நிறுவிய நாடுகளின் பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், 2008 இல் 13,242 மெகாவாட்டிலிருந்த, இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் 2022 இல் 1,59,949 மெகாவாட்டாக உயர்ந்தது. இது தவிர, தூய்மை இந்தியா திட்டம், கங்கையை சுத்தப்படுத்தும் நமாமி கங்கே போன்ற பல திட்டங்களும் சுற்றுச்சூழலை பாதுகாக்க செயல்படுத்தப்பட்டு வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios