கொரானா வைரஸால் கர்நாடகாவைத் தொடர்ந்து டெல்லியிலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால், இந்தியாவில் இறப்பு எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.
கொரானா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் கொரானா வைரஸ் பரவியுள்ளது. இந்தியாவிலும் கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வெளிநாடுகளுக்கு சென்று திரும்பியவர்களால் இந்தப் பாதிப்பு ஏற்பட்டது. நாடு முழுவதும் 81 பேர் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரானா பாதிப்பால் கர்நாடகாவின் கல்புர்க்கியைச் சேர்ந்த முகமது உசைன் சித்திக் என்ற 76 வயது முதியவர் உயிரிழந்தார். இவர் சவுதி அரேபியாவிலிருந்து இந்தியா திரும்பினார். பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 10ம் தேதி உயிரிழந்தார்.


இந்நிலையில், டெல்லியைச் சேர்ந்த 68 வயது மூதாட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தார். அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால், சிகிச்சை பலனின்றி, நேற்று இரவு உயிரிழந்தார். மூதாட்டி உயிரிழந்ததை டெல்லி அரசு உறுதி செய்துள்ளது. இதன் மூலம், கொரோனா பாதிப்பால் இந்தியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. மேலும் அந்த மூதாட்டியின் மகனுக்கும் கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.