டெல்லி, நவ.16-
கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜன்தன் கணக்குகளில் செலுத்தப்படும் பணத்தை அரசு கூர்ந்து கவனித்து வருவதாக மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார்.
கடந்த 8ம் தேதியன்று பிரதமர் நரேந்திர மோடி ரூ. 500, 1000 செல்லாது என அறிவித்தார். இதனையடுத்து வங்கிகளில், ஏடிஎம் மையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. கடந்த 8 நாட்களாக பொதுமக்களும் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். பலர் வேலைகளை விட்டு விட்டு வங்கி வாசலில் நிற்கின்றனர்.
அரசு அறிவிப்பு
இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அவசர ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து பேருந்து, ரயில், விமான நிலைய முன்பதிவு மையங்கள், கூட்டுறவு விற்பனை நிலையங்கள், அரசு ஆஸ்பத்திரிகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மற்றும் சொத்து வரி, மின் கட்டணம் உள்ளிட்ட அரசு கட்டணங்களைச் செலுத்த வரும் 24-ந் தேதி வரை பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
அனுமதி
வங்கிகளில் பணம் மாற்றுவது ரூ.4 ஆயிரத்தில் இருந்து ரூ.4,500 ஆகவும், வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுப்பதற்கான ஒரு வார உச்சவரம்பு ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. காசோலை மூலம் ஒரே நாளில் ரூ.24 ஆயிரம் வரை எடுக்கலாம். இதற்கு முன்பு ரூ.10 ஆயிரம் வரை மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தது.
கவனிக்கிறது
இந்தநிலையில், மேலும் சில கெடுபிடிகளை மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது. இதுகுறித்து நிருபர்களிடம் மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் சக்தி காந்த தாஸ் கூறியதாவது, கருப்புப் பணம் முதலீடு செய்யப்படுவதை தடுக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. ஜன்தன் கணக்குகளில் செலுத்தப்படும் பணத்தை அரசு கூர்ந்து கவனித்து வருகிறது. நியாயமான முறையில் அந்த கணக்குகளில் பணம் செலுத்துபவர்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாது என்றார்.
தட்டுப்பாடு ஏற்படாது
• கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் தங்களது உண்டியலில் பெறப்படும் ரூ.100, 50, 20, 10 சில்லறை பணத்தை உடனடியாக வங்கிகளில் டெபாசிட் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இதனால் சில்லறை புழக்கத்தில் தட்டுப்பாடு ஏற்படாது.
• கிளை தபால் நிலையங்கள், கூட்டுறவு வங்கிகளுக்கு புதிய நோட்டுகள் அனுப்பப்பட்டுள்ளன.
• நாட்டில் போதிய அளவு உப்பு உள்ளது. மக்கள் யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம்.
• ஆஸ்பத்திரிகள், மருந்தகங்களில் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுக்களை வாங்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சக்தி காந்த தாஸ் கூறினார்.
