குரங்கு தூக்கிச் சென்ற குழந்தையை தேடி வந்த நிலையில், அந்த குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம், தலபாஸ்கா கிராமத்தில் குரங்குகள் தொல்லை அதிகம் காணப்படுகிறது. ஊருக்குள் அடிக்கடி வரும் குரங்குகள், எதையாவது தூக்கிச் செல்லும். அப்படி வரும் குரங்குகளை கிராமத்தினர் விரட்டி அடிப்பதும் உண்டு. குரங்குகளை விரட்டும்போது, பொதுமக்களில் சிலரை குரங்குகள் கடித்து குதறியிருக்கிறது. இது குறித்து வனத்துறையிடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்ட்டுள்ளது. ஆனாலும், தலபாஸ்கா கிராமத்தினரின் புகார் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இந்த நிலையில், தலபாஸ்கா கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணா நாயக் என்பவரது மனைவிக்கு கடந்த 16 நாட்களுக்கு முன்பாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. மகன் பிறந்த சந்தோஷத்தில் திளைத்திருந்த ராமகிருஷ்ணா, மகனை கொஞ்சிவிட்டு நேற்று வீட்டுக்குள் தூங்கச் சென்று விட்டார். 

குழந்தையுடன் படுத்திருந்த அவரது மனைவி, முகம் கழுவ சென்று விட்டார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று, குழந்தையைப் பார்த்தது. குழந்தை என்று நினைத்ததா? அல்லது வேறு ஏதோவென்று நினைத்தா தெரியவில்லை. குழந்தையைப் அப்படியே தூக்கிக் கொண்டு ஓடியது. இதைப் பார்த்த ராமகிருஷ்ணவின்
மனைவி கூச்சல் போட்டார். ஆனாலும் குழந்தையைத் தூக்கிக் கொண்டு குரங்கு காட்டுக்குள் சென்று விட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

அலறி அடித்த ராமகிருஷ்ணன் குடும்பத்தினர், வன அலுவலகத்தில் சென்று புகார் செய்தனர். அவர்கள் மூன்று தனி அமைப்பைக் கொண்டு குழந்தையைத் தேடி வருகின்றனர். தீயணைப்பு துறை, வனத்துறை அதிகாரிகளும் தொடர்ந்து தேடி வருகின்றனர். குழந்தை எப்படியாவது கிடைக்க வேண்டும் என்று ராமகிருஷ்ணன் குடும்பத்தினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ராமகிருஷ்ணன் மட்டுமல்லாது அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் குழந்தை கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தித்து வருகின்றனர். 

குழந்தை தேடப்பட்டு நிலையில், அப்பகுதியில் உள்ள கிணறு ஒன்றின் அருகில் குழந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளது. இறந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டதை அறிந்த குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் பெருத்த அதிர்ச்சி அடைந்தனர். குரங்கினால், தூக்கிச் செல்லப்பட்ட குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தவரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.