கொரோனா வைரஸ் அதி தீவிரமாக பரவி வரும் நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த செவிலியர்கள் வேலையை உதறி விட்டு சொந்த மாநிலங்களுக்கு மொத்தமாக கிளம்பி வருவதால் அம்மாநில முதல்வர் பெரும் சிக்கலுக்கு ஆளாகி உள்ளார். 

மேற்கு வங்கத்தில் தற்போதைய நிலவரப்படி 2,677க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். 238  பேர் உயிரிழந்துள்ளனர்.  நாளுக்கு நாள் அங்கு கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. இந்நிலையில் கொல்கத்தாவில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணியாற்றி வந்த செவிலியர்கள்  300-க்கும் மேற்பட்டோர் வேலையை உதறிவிட்டு தங்களது சொந்த மாநிலங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். 

கடந்த வாரம் 185 நர்சுகள் வேலையை விட்டு தங்கள் சொந்த மாநிலமான மணிப்பூருக்கு சென்று விட்டனர். சனிக்கிழமையன்று 169 பேர் வேலையை விட்டு விட்டு சொந்த மாநிலங்களுக்கு சென்றனர். அவர்களில் 92 பேர் மணிப்பூருக்கும், 43 பேர் திரிபுராவுகும், 32 பேர் ஒடிசாவுக்கும், 2 பேர் ஜார்கண்டுக்கும் சென்றனர்.

இது தொடர்பாக மேற்கு வங்காள மாநில அரசின் தலைமைச் செயலாளர் ராஜீவா சின்காவுக்கு கொல்கத்தாவின் கிழக்கு இந்திய மருத்துவமனைகள் சங்க தலைவர் பிரதீப் லால் மேத்தா கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், ‘செவிலியர்கள் பணியை விட்டு எதற்காக தங்களது சொந்த மாநிலங்களுக்கு சென்று விட்டனர் என்பதற்கான காரணம் தெரியவில்லை.  ஆனால் மணிப்பூர் மாநில அரசு தங்கள் மாநிலத்தை சேர்ந்த செவிலியர்கள் சொந்த ஊருக்கு திரும்பினால் லாபகரமான உதவித்தொகையை வழங்குவதாக கூறி இருப்பதாக, தற்போதும் கொல்கத்தாவில் பணியில் தொடர்கிற செவிலியர்கள் மூலம் தெரிய வந்துள்ளது’’என தெரிவித்து இருந்தார். 

ஆனால் இந்தத் தகவலை மணிப்பூர் மாநில முதல்வர் நோங்தாம்பம் பிரேன் சிங் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர், தனது முகநூல் பக்கத்தில், ‘’அதிக உதவித்தொகை தரப்படும் என நாங்கள் கூறவில்லை. யாரையும் சொந்த மாநிலத்துக்கு திரும்பும்படி கேட்கவில்லை. இங்குள்ள செவிலியர்கள் கொல்கத்தா, டெல்லி, சென்னை என பிற நகரங்களில் பணியாற்றுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு அவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு நாங்கள் இழப்பீடும், வெகுமதியும் அளிப்போம் என்று கூறி இருக்கிறோம். ஆனால், தாங்கள் வேலை பார்க்கும் மருத்துவமனைகளில் அவர்கள் வசதியாக உணரவில்லை. அதேநேரத்தில் அவர்களை அங்கேயே தொடர்ந்து வேலை செய்யும்படி என்னால் கட்டாயப்படுத்த முடியாது. இது அவர்கள் விருப்பம்’’எனத் தெரிவித்துள்ளார்.
 
கொல்கத்தா தனியார் மருத்துவமனைகளில் செவிலியர்கள் வேலைகளை விட்டு சொந்த ஊருக்கு சென்று கொண்டிருப்பதால் அந்த நகரம் பதற்றத்தின் பிடியில் சிக்கி உள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு சிகிச்சை அளிப்பதில் நர்சுகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகி உள்ளது. இதனை மம்தா அரசு எப்படி சமாளிக்கப்போகிறது என்கிற கவலை ஏற்பட்டுள்ளது.