Nuh Violence: டெல்லிக்கும் பரவுகிறதா ஹரியானா நுஹ் கலவரம்; உச்சகட்ட பாதுகாப்பில் தலைநகரம்!!
ஹரியானாவில் நடந்து வரும் கலவரம் தற்போது டெல்லியை நோக்கி நகரலாம் என்ற அச்சத்தில் கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தில் நுஹ் மாவட்டத்தில் கடந்த திங்கள் கிழமை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் யாத்திரை சென்றனர். அப்போது சிலர் கற்கள் வீசியதால் கலவரம் ஏற்பட்டது என்று கூறப்பட்டது. கலவரம் ஏற்பட்டதற்கு உளவுத்துறை எச்சரித்தும் சரியான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தக் கலவரத்தில் இதுவரை ஆறு பேர் உயிரிழந்து உள்ளனர்.
நுஹ் மாவட்டத்தில் இருந்து குருகிராம் வரை கலவரம் பரவியுள்ளது. தற்போது இங்கிருந்து டெல்லி வரை கலவரம் பரவலாம் என்பதால் தலைநகர் டெல்லியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. எங்கெல்லாம் கூடுதல் பாதுகாப்பு தேவைப்படுகிறதோ அங்கு கூடுதலாக போலீசார் பணியில் அமர்த்தப்படுள்ளனர். டெல்லியில் இறையாண்மைக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையில் கலவரத்தில் ஈடுபட்டால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
மக்களவையில் டெல்லி அவசரச் சட்ட மசோதா தாக்கல்: இன்று விவாதம்!
ஹரியானா மோதல்களைக் கண்டித்து விஎச்பி, பஜ்ரங் தளம் அமைப்பினர் டெல்லியில் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
ஹரியானாவின் நுஹ் மற்றும் குருகிராமில் நடந்த கலவரத்தைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் அமைப்பினர் இன்று டெல்லியில் பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பஜ்ரங் தளம் மற்றும் விஎச்பியின் போராட்டங்களால் கிழக்கு டெல்லியை நகரின் மத்திய பகுதிகளுடன் இணைக்கும் விகாஸ் மார்க்கில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. நிலைமையை கண்காணிக்க போலீசார் ஆளில்லா விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
நுஹ் கலவரம் பின்னணி:
பசுக்கள் பாதுகாப்பு என்ற பெயரில் இருவருக்கு தீவைத்து எரித்துக் கொன்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டவர் பஜ்ரங்தள் அமைப்பை சேர்ந்த மோனு மானேசர். இவர் சிறையில் இருந்து வெளியே வந்துவிட்டார். இவர் சமூக வலையதலங்களில் அவ்வப்போது வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருபவர். திங்கள் கிழமை நடக்கும் யாத்திரையில் தானும் கலந்து கொண்டு இருப்பதாக மோனு மானேசர் வீடியோ வெளியிட்டு இருந்தார். ஆனால் இவர் கலந்து கொள்ளக் கூடாது என்று விஷ்வ இந்து பரிஷத் அறிவுறுத்தி இருந்த காரணத்தால், அவர் கலந்து கொள்ளவில்லை. இவர் கலந்து கொள்ள இருக்கிறார் என்ற வதந்தியும் கலவரத்திற்கு காரணமாக அமைந்துவிட்டது என்று கூறப்படுகிறது.
முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியை யாத்திரை கடந்து செல்லும்போது, கலவரம் ஏற்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அதற்கு தகுந்தவாறு பாதுகாப்பு போடவில்லை என்று தெரிய வந்துள்ளது.