மக்களவையில் டெல்லி அவசரச் சட்ட மசோதா தாக்கல்: இன்று விவாதம்!

எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் டெல்லி அவசரச் சட்ட மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார். மசோதா மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது

Amid Uproar in Lok Sabha union home minister tables Delhi ordinance bill

எதிர்க்கட்சிகளின் பெரும் அமளிக்கு மத்தியில், டெல்லியின் தேசிய தலைநகர் பிரதேச அரசு (திருத்தம்) மசோதாவை மத்திய அரசு நேற்று தாக்கல் செய்துள்ளது. டெல்லி அரசு அதிகாரிகள் மீதான கட்டுப்பாட்டை துணை நிலை ஆளுநருக்கு மாற்றும் சர்ச்சைக்குரிய இந்த மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார். இந்த மசோதா மீதான விவாதம் இன்று நடைபெறவுள்ளது.

இந்த மசோதா அரசியல் சாசனத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறிய நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்களின் எதிர்ப்பு அரசியல் ரீதியானது என்று கூறினார். “டெல்லி தொடர்பான எந்தவொரு சட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கிறது. டெல்லி மீது நாடாளுமன்றம் சட்டம் கொண்டு வரலாம் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.” என அமித் ஷா தெரிவித்தார்.

மசோதாவை எதிர்த்து பேசிய மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுவதாகவும், டெல்லி அரசின் அதிகாரங்களை மீறுவதாகவும் இருப்பதாக கூறினார்.

டெல்லி அவசரச் சட்ட மசோதாவுக்கு பிஜு ஜனதாதளம் ஆதரவளித்துள்ளது. மசோதாவுக்கு ஆதரவாக பேசிய அக்கட்சியின் எம்.பி., பினாக்கி மிஸ்ரா, “டெல்லி விவகாரத்தில் நாடாளுமன்றம் எந்தச் சட்டத்தையும் இயற்றலாம் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு கூறுகிறது. மசோதா மீதான அனைத்து எதிர்ப்புகளும் அரசியல் சார்ந்தது. மசோதாவுக்கு எதிராக வாக்களிக்கலாம். ஆனால் சட்டத்தின் அடிப்படையில், இதை நீங்கள் எதிர்க்க முடியாது.” என அவர் தெரிவித்தார்.

முன்னதாக, டெல்லி அவசரச் சட்ட மசோதாவுக்கு ஆதரவளிப்பதாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியும் அறிவித்தது. பாஜகவுக்கு மக்களவையில் பெரும்பான்மை இருப்பதால், இங்கு மசோதா எளிதில் நிறைவேறி விடும். ஆனால், மாநிலங்களவையில் சிக்கல் ஏற்படும் நிலை இருந்தது. இருப்பினும், பிஜு ஜனதாதளம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் இந்த மசோதாவை எளிதாக இரு அவைகளிலும் நிறைவேற்றி விடும் வாய்ப்பு தற்போது பாஜகவுக்கு அமைந்துள்ளது. ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மக்களவையில் 22 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 9 உறுப்பினர்களும் உள்ளனர். அதேபோல், பிஜு ஜனதாதளம் கட்சிக்கு மக்களவையில் 12 உறுப்பினர்களும், மாநிலங்களவையில் 9 எம்.பி.க்களும் உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

பள்ளி சேர்க்கைக்கு ஆதார் கட்டாயமில்லை: உறுதிப்படுத்திய மத்திய அரசு!

டெல்லி அரசு அதிகாரிகளை கட்டுப்படுத்தும் வகையிலான அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி துணை நிலை ஆளுநருக்கு மட்டுமே அதிகாரிகளை மாற்றும், நியமிக்கும் அதிகாரம் இருக்கும். டெல்லியில் அதிகார மையத்தை மத்திய அரசு தங்களது கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலான இந்த சட்டத்தை ஆம் ஆத்மி கடுமையாக எதிர்த்து வருகிறது.

இந்த மசோதாவை எதிர்க்குமாறு எதிர்க்கட்சிகளுக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். அதனை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. ஆனால், டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதாவை நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்ற பாஜக முனைப்பு காட்டி வருகிறது.

டெல்லி அவசரச் சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருப்பதாக கூறி அம்மாநில அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் பிஎஸ் நரசிம்மா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகிய 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், சில தினங்களுக்கு முன்னர் ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios