Dharmendra Pradhan: பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களிலும் புதிய கல்விக் கொள்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் போன்ற காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களும் புதிய கல்விக்கொள்ளையை ஏற்றுள்ளன எனவும் அவர் கூறியுள்ளார்.
திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தபோது அமைச்சர் தர்மேந்திர பிராதன் இதனைக் கூறியுள்ளார். தர்மேந்திர பிரதானின் பதிலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி.க்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர் அவை பிற்பகல் 12 மணிவரை ஒத்திவைத்துள்ளார்.
பட்ஜெட் மீதான விவாதத்துக்காக நாடாளுமன்ற மக்களவை இன்று மீண்டும் கூடியது. கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், பி.எம்.ஶ்ரீ. திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 2152 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்படவில்லை என்றும் மற்ற மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட கல்வி நிதி தமிழ்நாட்டுக்கு வழங்கப்படாமல் இருக்கிறது என்றும் குற்றம்சாட்டினார்.
விரைவில் ஜிஎஸ்டி வரி விகிதங்கள் குறையும்! நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி!
மத்திய அரசின் கொள்கையை ஏற்காவிட்டால் மாநில அரசுக்கு வழங்க வேண்டிய நிதி மறுக்கப்படாது என்றும் நிதி மறுப்பை மாநில அரசுகளைப் பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தப்படாது என்றும் உறுதி அளிக்கப்படுமா என தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், "மார்ச் மாதம் முடிய இன்னும் 20 நாள்கள் இருக்கின்றன. மத்திய அரசு இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறது. தமிழக அரசுடன் பல கட்டங்களாகப் பேச்சுவார்த்தை நடத்தினோம். பிஎம்ஸ்ரீ பள்ளிகள் தொடர்பாக மத்திய - மாநில அரசுகளுக்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்தது. அதற்காக மாநில கல்வி அமைச்சரும் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட தமிழக எம்.பி.க்களும் என்னை வந்து சந்தித்தனர். ஆனால் அவர்கள் கடைசி சில நேரத்தில் தங்கள் முடிவை மாற்றிக்கொண்டுவிட்டார்கள்" எனக் கூறினார்.
திமுக எம்.பி.க்களின் அமளிக்கு மத்தியில் பேசிய அமைச்சர், "பாஜக ஆளாத மாநிலங்களிலும், உதாரணமாக கர்நாடகாவில் கூட தேசிய கல்விக் கொள்கையை ஏற்றிருக்கிறது. காங்கிரஸ் ஆளும் இமாச்சலப் பிரதேச மாநிலத்திலும் புதிய கல்விக் கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. தேசியக் கல்விக் கொள்கை மூலம் இந்தி திணிபு நடப்பதாகக் குற்றம்சாட்டுவது தவறானது" என்றார்.
தொடர்ந்து திமுக அரசை சாடிய அமைச்சர், "அவர்கள் நேர்மையற்றவர்கள். அவர்களுக்கு தமிழக மாணவர்களின் நலனில் அக்கறை இல்லை. அவர்கள் தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்குகிறார்கள். அவர்களின் ஒரே வேலை மொழி பிரச்சினையை உருவாக்குவதுதான். அவர்கள் அரசியல் செய்கிறார்கள், குறும்பு செய்கிறார்கள். அவர்கள் ஜனநாயக விரோதிகள், அநாகரிகமானவர்கள்..." எனவும் அமைச்சர் கடுமையாகச் சாடினார்.
"பிஎம்ஸ்ரீ திட்டத்தில் சேர்வதாகக் கூறிவிட்டு, பிறகு யூ-டர்ன் அடித்தது ஏன்? தமிழக முதல்வர் புதிய கல்விக்கொள்கையை ஏற்று கையெழுத்திட முன்வந்தார். ஆனால், திடீரென ஒரு சூப்பர் முதல்வர் வந்து அதைத் தடுத்துவிட்டார். தமிழக அரசு மாணவர்களை வஞ்சிக்கிறது. சூப்பர் முதல்வர் சொன்னதால் புதிய கல்விக்கொள்கையில் கையெழுத்திட மறுத்திருக்கிறது. அந்த சூப்பர் முதல்வர் யார்?" என்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழக மக்களைப் பற்றி அநாகரிமானவர்கள், ஜனநாயக விரோதிகள் என்று பேசியதற்கு திமுக எம்பி கனிமொழி கண்டனம் தெரிவித்தார். இதனையடுத்து, தனது பேச்சில் அந்த வார்த்தைகள் புண்படுத்தும் விதமாக இருந்தால், அவற்றைத் திரும்பப் பெறுவதாக தர்மேந்திர பிரதான் கூறினார்.
முழு போதையில் கார் ஓட்டி வந்து நடுரோட்டில் சிறுநீர் கழித்த இளைஞர்!
