நட்சத்திர ஓட்டல்களில் சாப்பிடும் மக்கள் சேவை வரி செலுத்துவது என்பது அவர்கள் விருப்பம், சேவை செலுத்தக் கூறி கட்டாயப்படுத்தக்கூடாது என மத்தியஅரசு நேற்றுமுன்தினம் கூறியிருந்தது. 

இந்நிலையில், ‘சேவை வரி செலுத்தாவிட்டால் ஓட்டலில் வந்து வாடிக்கையாளர்கள் சாப்பிட வர வேண்டாம். சேவை வரி செலுத்த வேண்டும் என்பது நீதிமன்ற உத்தரவு’ என்று இந்திய தேசிய ரெஸ்டாரான்ட் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

புகார்

ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் சேவைவரி என்ற பெயரில் 5 முதல் 20 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. சில இடங்களில் சாப்பிடவரும் வாடிக்கையாளர்களிடம் சேவை வரி கட்டாயமாக ஓட்டல் நிர்வாகத்தினர் சேவை வரி வசூலிப்பதாக அரசுக்கு புகார் சென்றது. 

கட்டாயம் அல்ல

இது குறித்து இந்திய ஓட்டல் அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பி மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. மேலும், ஓட்டலில் சாப்பிடும் மக்கள் சேவை வரி  செலுத்த வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என அரசு அறிவித்தது.

வாடிக்கையாளர் சாப்பிடும்போது, அவருக்கு ஓட்டலின் சேவை சரியில்லை எனக் கருதினால், சேவை வரி செலுத்தத் தேவையில்லை. சேவை வரி செலுத்துவது என்பது வாடிக்கையாளரின் விருப்பத்தை பொருத்தது. நுகர்வோரின் கவனத்துக்கு வராமல் சேவைவரி வசூலிப்பது நியாயமற்ற வர்த்தக நடைமுறை.

விளக்கம்

இது குறித்த தகவலை மாநில அரசுகள் அனைத்து ஓட்டல், ரெஸ்டாரன்ட்களுக்கும் தெரியப்படுத்த வேண்டும். மேலும், ஓட்டல்களும், பெரிய அறிவிப்பு பலகையில் வாடிக்கையாளர்கள் அறியும் வகையில் தெரியப்படுத்த வேண்டும் என்று மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. 

தண்டனையா?

இந்நிலையில், இது குறித்து இந்திய தேசிய ரெஸ்டாரன்ட் அமைப்பின் தலைவர் ரியாஸ் அல்மானி கூறுகையில், “ நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை ரெஸ்டாரன்ட்கள் தெளிவாக பின்பற்றி நடக்கின்றன. அப்படி இருக்கும்போது, எங்களின் நடவடிக்கையை ஆய்வு செய்து, வாடிக்கையாளர்களின் சம்மதம் இல்லாமல் சேவை வரி வசூலிக்கும் ஓட்டல்களுக்கு தண்டனை தர முயற்சி நடக்கிறது.

நேர்மையற்ற நடைமுறைஅல்ல

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் என்பது நியாயமற்ற வர்த்தக செயல்பாட்டில் இருந்து நுகர்வோரை காக்கும் சட்டமாகும். சேவை வரி என்பதை நாங்கள் வாடிக்கையாளர்களுக்கு உணவுப்பட்டியல் அட்டையில் குறிப்பிட்டுள்ளோம். நாங்கள் எந்தவிதமான நேர்மையற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றவில்லை. 

வரவேண்டாம்

சேவை வரி செலுத்தாவிட்டால், வாடிக்கையாளர்கள் ஓட்டலுக்கு வந்து சாப்பிட வேண்டியது இல்லை'' எனத் தெரிவித்தார். 

என்ன செய்ய?

மற்றொரு ரெஸ்டாரன்ட் நிர்வாகி ஒருவர் கூறுகையில், “ மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவு தெளிவற்றதாக, குழப்பமானதாக இருக்கிறது. வாடிக்கையாளர்கள் சாப்பாடு சாப்பிட்டுபின், உணவு நன்றாக இருக்கிறது, சாலட் மட்டும் நன்றாக இல்லை என்று கூறி சேவை வரிசெலுத்தாமல் சென்றுவிட்டால் என்ன செய்வது. வாடிக்கையாளர்கள் குறைகூறுவது அதிகமான வரிகள் இருப்பது குறித்துதான், சேவை வரி குறித்து அல்ல'' என்றார்.