நட்சத்திர ஓட்டல்களில் ஏ.சி. அறையில் அமர்ந்து சாப்பிடும் போது வசூலிக்கப்படும் சேவை வரிக்கட்டணம் செலுத்த வாடிக்கையாளரை கட்டாயப்படுத்தக்கூடாது. சேவை வரி செலுத்துவது என்பது வாடிக்கையாளரின் விருப்பம் என்று மத்தியஅரசு தெரிவித்துள்ளது.

ஓட்டல்கள் மற்றும் ரெஸ்டாரன்ட்களில் வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கப்படும் சேவைவரி என்ற பெயரில் 5 முதல் 20 சதவீதம் வரி வசூலிக்கப்படுகிறது. சில இடங்களில் சாப்பிடவரும் வாடிக்கையாளர்களிடம் சேவை வரி கட்டாயமாக ஓட்டல் நிர்வாகத்தினர் சேவை வரி வசூலிப்பதாக அரசுக்கு புகார் சென்றது.

இது குறித்து இந்திய ஓட்டல் அமைப்புக்கு நோட்டீஸ் அனுப்பு மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டது. அதில், சேவை வரி என்பது வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டும் என்பது கட்டாயம் அல்ல.

வாடிக்கையாளர் சாப்பிடும்போது, அவருக்கு ஓட்டலின் சேவை சரியில்லை எனக் கருதினால், சேவை வரி செலுத்தத் தேவையில்லை. சேவை வரி செலுத்துவது என்பது வாடிக்கையாளரின் விருப்பத்தை பொருத்தது என்று விளக்கம் அளித்தது.

இதையடுத்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது-

ஓட்டல்கள், ரெஸ்டாரன்ட்களில் தங்கும், சாப்பிடும் நுகர்வோர்கள் சேவைவரிக் கட்டணம் செலுத்துவது என்பது கட்டாயம் கிடையாது. அது அவர்களின் விருப்பத்தைப் பொருத்தது. இது குறித்த தகவலை மாநில அரசுகள் அனைத்து ஓட்டல், ரெஸ்டாரன்ட்களுககும் தெரியப்படுத்த வேண்டும். மேலும், ஓட்டல்களும், பெரிய அறிவிப்பு பலகையில் வாடிக்கையாளர்கள் அறியும் வகையில் தெரியப்படுத்த வேண்டும். சேவை வரி  என்பது கட்டாயமல்ல. வாடிக்கையாளர்கள் விருப்பப்பட்டால் செலுத்தலாம். எங்களின் சேவை சிறப்பாக இருந்தால் மட்டும் செலுத்தலாம் என்று எழுதிவைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.