எம்.பி.க்கள் உள்ளிட்ட யாரையும், விமானத்தில் பறக்க தடைவிதித்து விமான நிறுவனங்கள் உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது. சட்டத்தின் அடிப்படையிலேயே செய்ய முடியும் என்று மாநிலங்கள் அவையின் துணைத்தலைவர் பி.ஜே. குரியன்தெரிவித்தார்.

தெலங்கு தேசம் கட்சியின் எம்.பி. திவாகர் ரெட்டி கடந்த மாதம், இன்டிகோ விமானம் மூலம் விசாகப்பட்டிணத்தில் இருந்து ஐதராபாத் செல்ல முயன்றார். ஆனால், தாமதமாக வந்த காரணத்தால், அவரை பயணிக்க விமான நிறுவனம் மறுத்துவிட்டது. இதனால், விமான நிறுவன ஊழியர்களிடம் எம்.பி. திவாகர் ரெட்டி வாக்குவாதம் செய்து, அங்கிருந்த பொருட்களை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அனைத்த விமான நிறுவனங்களும் திவாகர் ரெட்டி விமானத்தில் பயணம் செய்ய தடை விதித்தன. அந்த தடைகுறித்து நீதிமன்றம் விமான நிலைய ஒழுங்கு முறை ஆணையத்துக்கும், அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியது. இதை தொடர்ந்து, திவாகர் ரெட்டி மீதான தடையை நேற்று முன் தினம் நீக்கப்பட்டது.

இதேபோல, கடந்த சில மாதங்களுக்கு முன் சிவசேனா எம்.பி. ரவிந்திர கெய்வாட், விமான நிலைய ஊழியரை தாக்கியதன் காரணமாக அவருக்கும் இது போல் தடைவிதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தை மாநிலங்கள் அவையில் சமாஜ்வாதி கட்சியின் எம்.பி. நரேஷ் அகர்வால் எழுப்பி பேசினார். அப்போது, விமான நிறுவன ஊழியர்களிடம் தகராறு செய்பவர்களை எந்த அடிப்படையில் விமானத்தில் பறக்க தடை விதிக்கின்றன. அதற்கு என்ன விதிமுறை இருக்கிறது. இது எம்.பி.களின்உரிமையில் தலையிடுவது போன்றதாகும் என்றார்.

இதற்கு அவையின் துணைத்தலைவர் பி.ஜே. குரியன் பதில் அளித்து பேசுகையில், “சமாஜ்வாதி உறுப்பினர் அகர்வால் நியாயமான கோரிக்கையை முன்வைத்துள்ளார். ஏதாவது ஒரு எம்.பி. குற்றம் செய்து இருந்தால், சட்டத்துக்கு எதிராக நடந்து இருந்தால், அது குறித்து சட்டப்படிதான் நடவடிக்கை எடுக்க முடியும். விமானநிறுவனங்கள் அந்த குறிப்பிட்ட எம்.பி.யை தண்டிக்க அதிகாரம் வழங்கப்படவில்லை. இது குறித்து அரசு கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எம்.பி. அல்லது தனிநபர் தவறு செய்து தண்டனை விதிக்க வேண்டுமானால், அது சட்டப்படிதான் நடக்க வேண்டும். சில குற்றங்களுக்காக எம்.பி.க்கள் மீது விமானத்தில் பறக்க தடை விதிப்பது என்பது செய்ய முடியாது. விமானநிறுவனங்களுக்கு அதிகாரம் இல்லை’’ என்று தெரிவித்தார்.