பிரேன் சிங் பதவியில் இருக்கும் வரை மணிப்பூரில் அமைதி திரும்பாது: காங்கிரஸ் திட்டவட்டம்
மணிப்பூர் முதல்வராக உள்ள பிரேன் சிங் பதவியில் இருக்கும் வரை அந்த மாநிலத்தில் அமைதி திரும்ப வாய்ப்பில்லை என காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
பிரேன் சிங் முதலமைச்சராக இருக்கும் வரை மணிப்பூரில் அமைதியை நோக்கி எந்த மாற்றமும் இருக்காது என்று காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. மணிப்பூரில் பாஜகவின் டபுள் எஞ்சின் ஆட்சியை வீழ்ச்சியை விமர்சித்துள்ள அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் இவ்வாறு கூறியுள்ளார்.
கடந்த மே 15ஆம் தேதி மணிப்பூரின் இம்பால் கிழக்கு மாவட்டத்தில் கடத்திச் சென்று கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட 18 வயது பெண், ஜூலை 21ஆம் தேதி காவல்துறையை அணுகி புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் பேரில் ஜீரோ எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதன் எதிரொலியாக காங்கிரஸ் பாஜக அரசை கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "மணிப்பூரின் திகிலான உண்மை நிலவரம் ஒவ்வொரு நாளும் வெளிவருகிறது. மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. கும்பல்கள், ஆயுதமேந்திய காவலர்கள் மற்றும் கிளர்ச்சிக் குழுக்கள் வெறித்தனமாக நடந்துகொள்கின்றனர். பெண்கள் மற்றும் குடும்பங்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு மிக மோசமான கொடுமைகளை எதிர்கொண்டிருக்கிறார்கள்" என்று கூறியுள்ளார்.
மாநில அரசு நிர்வாகமே வன்முறைக்கு உடந்தையாக இருப்பது மட்டுமின்றி, வெறுப்புணர்வைத் தூண்டி வருகிறது என்றும் ஜெய்ராம் ரமேஷ் சாடியுள்ளார். மேலும், அவர் கூறுகையில், சமூகங்களுக்கு இடையேயான நம்பிக்கை இழப்பு காரணமாக மாநிலத்தின் சமூகக் கட்டமைப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"பிரேன் சிங் முதலமைச்சராக இருக்கும் வரை எந்த நீதியும் கிடைக்காது. மாநிலம் அமைதியை நோக்கி நகர்வதும் சாத்தியமில்லை. காலம் கடந்துவிட்டபோதும் பிரதமர் செயல்படவில்லை. இப்போதே அவர் செயல்பட வேண்டும்" என்று காங்கிரஸ் தலைவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், மணிப்பூரில் இரட்டை எஞ்சின் ஆட்சி நடந்ததை மூடி மறைக்கவோ, திசை திருப்பவோ, அவதூறு செய்யவோ கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மே 3 அன்று மணிப்பூரில் இனக்கலவரம் வெடித்ததில் இருந்து 160க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். மே 4 அன்று இரண்டு பெண்கள் ஆடைகள் இல்லாமல் இழுத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வீடியோ ஆன்லைனில் வெளியானது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.