ரூ.1000, ரூ. 500 நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பு உயிரோடு இருப்பவரையும் பாதித்து வருகிறது, செத்தவர்களையும் பாதிக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் இறந்தவருக்கு இறுதிச்சடங்கு நடத்த பணம் செல்லாதது ஆகிவிட்டதாலும், போதுமான பணம் இல்லாததாலும், பணத்துக்காக குடும்பமே வங்கியின் முன் வரிசையில் காத்துக்கிடந்த கொடுமை நடந்துள்ளது. இதனால், இறுதிச்சடங்கை ஒரு நாள் தள்ளிவைத்தனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்குப்பகுதி மாவட்டம் மீரட். இந்த நகரைச் சேர்ந்த பேலா தேவி என்ற பெண் கடந்த வியாழக்கிழமை இரவு மரணமடைந்தார். வெள்ளிக்கிழமை அன்று இறுதிச்சடங்கு நடந்த குடும்பத்தினர் முடிவு செய்து இருந்தனர்.

ஆனால், வியாழக்கிழமை அன்று தான் பிரதமர் மோடி, நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கருப்புபணம், கள்ளநோட்டுக்களை ஒழிக்கும் நோக்கில் ரூ.1000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என அறிவித்தார். மேலும், வங்கியில் நபர் ஒருவருக்கு ரூ. 4 ஆயிரத்துக்கு மேல் தரப்படாது எனவும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பு நாட்டில் உள்ள கள்ளநோட்டு, கருப்பு பணம் வைத்திருப்பவர்களையும் பாதிக்கிறதோ இல்லையோ சாமானிய மக்களை கடுமையாக பாதித்து வருகிறது.
குறிப்பாக இறந்துபோன பேலா தேவியின் குடும்பத்தினரையும் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்த்தியது. இறுதிச்சடங்கு நடத்த வைத்திருந்த பணமும் செல்லாமல் போனது, மற்றும் கையிலும் போதுமான பணம் இல்லை. மறுநாள் வங்கியில் எடுக்கலாம் என்றால், வங்கியில் நபர் ஒருவருக்கு ரூ.4 ஆயிரத்துக்கு மேல் தரப்படாது என்றனர். இதனால், திட்டமிட்டபடி வெள்ளிக்கிழமை இறுதிச்சடங்கை நடத்த முடியவில்லை.
இதனால், வெள்ளிக்கிழமையன்று, பேலா தேவியின் சடலத்தை வீட்டில் வைத்து விட்டு, குடும்பமே நகரில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் வாசலில் பணத்துக்காக வரிசையில் நிற்கத் தொடங்கினர்.
இது குறித்து பேலா தேவியின் மகன் சந்தோஷ் கூறுகையில், “ எங்கள் கையில் பணம் இல்லை. இருக்கின்ற பணமும் செல்லாதாகி விட்டது. அதனால்தான், என் தாயின் இறுதிச்சடங்கை ஒரு நாள் தள்ளி சனிக்கிழமை(இன்று) தள்ளி வைத்துவிட்டு, வங்கியில் பணம் எடுக்க வந்துள்ளோம். என்ன செய்ய. அவசரமாயிற்றே'' என்று தெரிவித்தார்.
இது மட்டுமல்லாமல், ஆக்ராவில் உள்ள குழந்தைகள் தங்கள் பெற்றோர்கள் சில்லறை இல்லால் பெரும் சிரமப்படுகிறார்கள் என உணர்ந்து, தங்களின் சிறுசேமிப்பு வைத்துள்ள உண்டியலை உடைத்து, எடுத்துக்கொடுத்தனர்.
