நாட்டில் உள்ள 24 மாநிலங்களில் நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் இல்லை, அதே சமயம், தரப்பரிசோதனை செய்யப்படாமல் காலாவதியான மருந்துகள் தரப்படுவதால், நோயாளிகளின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மத்திய தலைமை கணக்கு தணிக்கை அலுவலகத்தின்(சி.ஏ.ஜி.) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் கீழ் குழந்தைகள் நலன் மற்றும் இனப்பெருக்கம் என்ற தலைப்பில் சி.ஏ.ஜி. நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தது. 

2011-12 முதல் 2015-16ம் ஆண்டு வரையிலான தணிக்கை விவரங்கள் அதில் தரப்பட்டுள்ளன. நாட்டில் மருத்துவர்கள் பற்றாக்குறையும், மருந்தகங்களில் பணியாட்கள் பற்றாக்குறையும் இருப்பதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குறிப்பாக அசாம், பீகார், சட்டீஸ்கர், குஜராத், ஹரியானா, கர்நாடகா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, தெலங்கானா, திரிபுரா, உத்தரபிரதேசம் ஆகிய 24 மாநிலங்களில் நோயாளிகளுக்கு அத்தியாவசிய மருந்துகள் போதுமான அளவில் இல்லை. 

மேலும், 8 மாநிலங்களில் நோயாளிகளுக்கு தேவையான வைட்டமின்மாத்திரைகள், அத்தியாவசிய மருந்துகள், கருத்தடை மாத்திரைகள்,மகப்பேறியியல் மருந்துகள் உள்ளிட்ட வசதிகள் போதுமான அளவில் இல்லை. 28 மாநிலங்களில் அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சைக்காக வரும் பெண்கள் குறித்த முறைப்படியான பதிவேடு, அறிக்கை ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதுமட்டுமல்லாமல் 28 மாநிலங்களில் நோயாளிகளுக்கு இரும்புச்சத்து, போலீக்ஆசிட் மாத்திரைகள் பற்றாக்குறையாக இருப்பதாகவும், அருணாச்சலப்பிரதேசம்,ஜம்முகாஷ்மீர், மணிப்பூர் மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களில் 50 சதவீதத்துக்கு குறைவான மகப்பேறு அடைந்த பெண்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன எனக்கூறப்பட்டுள்ளது. 

பிரசவத்தில் சிசுக்கள் மரணம் என்பது ஆயிரம் குழந்தைகளுக்கு 39 ஆக இருந்த நிலையில், இது 27-ஆகக் குறைந்துள்ளது. அதேசமயம், சிசு இறப்பு என்பது,அசாம்(49), பீகார்(42), சட்டீஸ்கர்(43), மத்திய பிரதேசம்(52), ஓடிசா(49), உத்தரப்பிரதேசம்(48) ஆகிய மாநிலங்களில் மிகவும் அதிகமாக இருக்கிறது. 

பிரசவநேரத்தில் தாய் இறக்கும் சம்பவங்கள் என்பது 9 மாநிலங்களில் மிகவும் அதிகமாக இருக்கிறது. அசாம்(300), பீகார்(208), சட்டீஸ்கர்(221), ஜார்கண்ட்(208), மத்திய பிரதேசம்(221), ஒடிசா(222), ராஜஸ்தான்(244), உத்தரப்பிரதேசம்(285),உத்தரகாண்ட்(285) ஆகிய மாநிலங்களில் அதிகமாக இருக்கிறது.

மேலும், பிரதமர் மோடி அறிவித்த ஜனனி சுரக் ஷா யோஜனா திட்டத்தில் பயணாளிகளுக்கு இன்னும் பணம் வழங்கப்படவில்லை, வழங்கப்படும் பணமும் மிகவும் தாமதாக இருக்கிறது. 12 ஆயிரத்து  723 பேருக்கு கூடுதலாக பணம்தரப்பட்டுள்ளது.

தமிழகம், சட்டீஸ்கர், குஜராத் ,ஹரியானா, கர்நாடகா, ராஜஸ்தான் உள்ளிட்ட 17 மாநிலங்களில் எக்ஸ்ரே, இ.ஜி.ஜி., இதய நோய் கருவிகள், ரத்த காப்பகம் ஆகியவை இருந்தும் அதை பயன்படுத்த போதுமான மருத்துவர்கள், திறமையான பயிற்சி பெற்றவர்களும் இல்லாமல் இருக்கின்றனர்.

சுகாதார திட்டங்களுக்காக வழங்கப்பட்ட தொகையில், கடந்த 2011-12ம் ஆண்டு ரூ. 7 ஆயிரத்து 375 கோடியை 27 மாநிலங்கள் செலவு செய்யவில்லை, 2015-16ம் ஆண்டு ரூ.9 ஆயிரத்து 509 கோடியையும் செலவு செய்யவில்லை.

28 மாநிலங்களில்  28 சதவீதம் அளவுக்கு துணை சுகாதார நிலையம், ஆரம்பசுகாதார நிலையம், சமூக நல மையம் ஆகியவை பற்றாக்குறையாக இருக்கின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.