இது அரசின் கொள்கை முடிவு என்பதால், கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும், மாணவர்கள் தவறு செய்யாமல் இருப்பதைத் தடுப்பது கடமையாகும் என்றும் யுஜிசி எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

பல்கலைக்கழகங்கள், சுயாட்சி பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் தேர்வு நடத்தும் போது மாணவர்கள் செல்போன், ப்ளூ டூத், வாட்ச் போன்றவற்றின் உதவியுடன் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபடலாம்.அதைத் தடுக்கும் பொருட்டு குறைந்த அலைவரிசையைத் தடுக்கும் ஜாமர்கருவிகளை தேர்வு மையங்களில் பொருத்தலாம் என்று கடந்த 2016-ம் ஆண்டு உத்தரவிட்டுள்ளது.

அந்த அடிப்படையில் யுஜிசி இப்போது அனைத்து துணை வேந்தர்களுக்கும் கடிதம் எழுதி கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உள்ள தேர்வு மையங்களில் ஜாமர் கருவி பொருத்த உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு துணை வேந்தர்களுக்கும், கல்லூரி முதல்வர்களும் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

அரசின் கொள்கை முடிவுகளை கடைப்பிடிப்பதைக் கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும். அதன்படி தேர்வுகளில் மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கும் பொருட்டு அனைத்து பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் உள்ள தேர்வு மையத்தில் குறைந்த அலைவரிசை கொண்ட ஜாமர்களை பொருத்துவது கட்டாயம்.
தேர்வு மையங்களில் மட்டும் பயன்படுத்தப்படும் அளவுக்குச் சிறிய அளவிலான ஜாமர்கள் உருவாக்கப்பட்டுள்ளன, அவை பரிசோதனை முயற்சியும் வெற்றி அடைந்துள்ளன. 

இந்த சிறியரக ஜாமர் கருவிகளைப் பொருத்தினால் 100 மீட்டர் சுற்றளவுக்கு எந்த விதமான சிக்னலும் வராமல் தடுக்கும்.
தேர்வு நடக்கும் முன் ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஜாமர் கருவி பொருத்தப்பட்டுள்ளதா, அதன் செயல்பாடு எப்படி என்பதையும் சோதிக்க வேண்டும். ஜாமர் கருவியின் தன்மை, வலிமை, சிக்னல்களைதடுக்கும் திறன், எத்தனை மீட்டருக்கு சிக்னலைத் தடுக்கும், உள்ளிட்டவற்றையும் சோதிக்க வேண்டும்

மேலும், ஜாமர் கருவி பொருத்தும் முன் முறையான பாதுகாப்பு அதிகாரிகளிடம் அனுமதி பெற்று பொருத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
தி எலெக்ட்ரானிக்ஸ் கார்பரேஷன் இந்தியா லிமிட்(இசிஐஎல்), பாரத் எலெக்ட்ரானி்க்ஸ் லிமிட்(பிஇஎல்) ஆகிய நிறுவனங்கள் குறைந்த சக்தி கொண்ட ஜாமர்களைதயாரிக்கின்றன. தேவைப்படும் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தொடர்பு கொண்டால், வாடகை முறையில் ஜாமர் கருவிகளைப் பொருத்திக்கொடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.