நம்பிக்கை இல்லா தீர்மானம்: 2ஆவது நாளாக இன்றும் விவாதம்!
மக்களவையில் 2ஆவது நாளாக இன்றும் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறவுள்ளது
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு எதிராக கடந்த ஜூலை 26 ஆம் தேதி மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடியை அவைக்கு வரவழைத்து பேச வைப்பதற்காகவே இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
காங்கிரஸ் கட்சியின் மக்களவை துணைத் தலைவர் அசாம் மாநில எம்.பி.யுமான கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவருமாறு நோட்டீஸ் வழங்கினார். அதனை, இந்தியா கூட்டணிக் கட்சிகள் அனைத்தும் ஆதரிப்பதாகத் தெரிவித்தன. அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக அறிவித்த மக்களவை சபாநாயகர், ஆகஸ்ட் 8, 9 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறும் என்று அறிவித்தார்.
அதன்படி, மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் நேற்று தொடங்கியது. நம்பிக்கையில்லா தீர்மானம் மீது காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தி உரையைத் தொடங்குவார் எனக் கூறப்பட்ட நிலையில், நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை கொண்டு வந்த கவுரவ் கோகாய், அந்த தீர்மானத்தை மக்களவையில் தாக்கல் செய்து பேசினார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடியின் மவுன விரதத்தைக் கலைக்கவே நாங்கள் இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ளதாக குறிப்பிட்டார்.
ரயில் சேவையில் அதிரடி மாற்றம்.. எந்தெந்த ரயில்கள் ரத்து.. இதோ முக்கிய தகவல்கள்..!
முதல் நாளான நேற்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் சுமார் 6 மணி நேரம் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் கவுரவ் கோகய், மணிஷ் திவாரி உள்ளிட்டோர் பேசினர். திமுக சார்பில், திமுக எம்.பி டி.ஆர்.பாலு, விசிக எம்.பி., திருமாவளவன், திரிணாமுல் காங்கிரஸ் எம்பி சுகதா ராய் உள்ளிட்ட பலரும் பேசினர்.
நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பாஜக சார்பில் நிஷிகாந்த் துபே முதல் ஆளாக பேசினார். அப்போது பேசிய அவர், “இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் ஏழை தாயின் மகனுக்கு எதிராக, மக்களுக்கு வீடு, குடிநீர், கழிவறைகளை வழங்கியவருக்கு எதிரானது. இது ஏழைகளுக்கு எதிரானது.” என்றார். அவர் தவிர மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு உள்ளிட்டோரும் பாஜக சார்பில் பேசினர்.
அதன் தொடர்ச்சியாக, மக்களவையில் 2ஆவது நாளாக இன்றும் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெறவுள்ளது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் மக்களவை எம்.பி.க்கள் கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு நாடாளுமன்றத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி, தகுதி நீக்க உத்தரவு ரத்தாகியுள்ளதால் மீண்டும் அவைக்கு வந்துள்ள ராகுல் காந்தி இன்று உரையாற்றுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக அரசுக்கு எதிரான தீர்மானம் மீதான விவாதத்தில் இன்றும் அனல் பறக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
நம்பிக்கை இல்லாத் தீர்மானம் விவாதத்தின் மீது ஆகஸ்ட் 10ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி பதிலளித்து பேசுவார் என தெரிகிறது. கடந்த ஜூலை மாதம் 20ஆம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வருகிற 11ஆம் தேதியுடன் நிறைவுபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.