ஏன் பொட்டு வைக்கல? விளம்பரத்தால் வந்த பிரச்சனை - பிரபல நிறுவனத்தை வறுத்தெடுத்த நெட்டிசன்கள் - என்ன நடந்தது?
Nalli Silks : அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரு மாதங்களும் பல திருவிழாக்களை கொண்டாடும் மாதங்களாக உள்ளது. இதனால் மக்கள் கொண்டாட்டங்கள் ஒருபுறம் இருக்க, பல்வேறு நிறுவனங்கள் தங்கள் பொருட்களை தள்ளுபடிகளோடு விளம்பரம் செய்வது வழக்கமான ஒன்று.
இதேபோல், பிரபல பிராண்டான நல்லி சில்க்ஸ், சமீபத்தில் தங்கள் புதிய வடிவமைப்புகளை விளம்பரப்படுத்த ஒரு விளம்பரத்தை வெளியிட்டது. இருப்பினும், அந்த விளம்பரம் தான் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திவிட்டது. அந்த விளம்பரத்தில் அழகான புடவை அணிந்திருந்த மாடல் ஒருவர், நெற்றியில் பொட்டு இல்லாமல் காணப்பட்டதால், அது பல பிரச்சனைகளை சந்தித்துள்ளது.
இந்திய மக்களின் நம்பிக்கைகளின்படி, எந்தவொரு உடையும், குறிப்பாக பண்டிகைகளின் போது உடுத்தும் உடைகள், நகைகள் மற்றும் பொட்டு இல்லாமல் முழுமையடையாது என்பது அனைவரும் அறிந்ததே. பொட்டு என்பது மங்களகரமான ஒரு விஷயமாகவும், அதிர்ஷ்டத்தின் சின்னமாகவும் கருதப்படுகிறது. இந்நிலையில் நகை இல்லாமல், வெறும் கழுத்தோடு, பொட்டில்லாமல் வந்த அந்த விளம்பரத்தால் பெரும் பிரச்சனை மூண்டுள்ளது.
அந்த விளம்பரத்தை பார்த்து அதிருப்தி அடைந்த பல மக்கள் #NoBindiNoBusiness என்ற ஹாஷ் டேக்கை உருவாக்கி நல்லி நிறுவனத்திற்கு பெரும் குடைச்சலை கொடுத்துள்ளனர். பல பயனர்கள் ஆன்லைனில் தங்கள் ஏமாற்றங்களை வெளிப்படுத்தினர், "நோ பிண்டி நோ பிசினஸ்" என்ற ஹேஷ்டேக் மைக்ரோ பிளாக்கிங் பிளாட்ஃபார்ம் எக்ஸ்ல் இருந்தது. "இந்த விளம்பரத்தைப் பாருங்கள், நல்லி போன்ற ஒரு பாரம்பரிய நிறுவனம் கூட பொட்டு அணியாத மாடலைப் பயன்படுத்துகிறது, இது ஒரு நல்ல நோக்கமாக தெரியவில்லை என்று பலரும் கூறினார்.
இதுபோன்ற பல விமர்சனங்களுக்குப் பிறகு, நல்லி சில்க்ஸ் மற்றொரு விளம்பரத்தை வெளியிட்டது, அதை நடிகர் சோனி ஸ்ரீவஸ்தவா பகிர்ந்திருந்தார். அந்த விளம்பரத்தில் பல மாடல்கள் நல்லி பட்டுப் புடவைகளை உடுத்திக் கொண்டு தங்களுடைய நகைகள் மற்றும் பொட்டுக்களோடு மிக அழகாக அதில் காணப்பட்டனர். மக்களின் கடும்கோபத்தை பொருட்படுத்த முடியாத நல்லி நிறுவனம் புதிய விளம்பரம் ஒன்றை உருவாக்கியது பலரால் பாராட்டப்பட்டு வருகின்றது.