No age for learning 98 year old man does his masters in economics

98 வயதில் எம்.ஏ., பட்டம் பெற்று சாதித்துள்ளார் முதியவர் ராஜ்குமார்.
இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பீகார் மாநிலம் பாட்னாவில் நாளந்தா பல்கலைக்கழகத்தில் திறந்த நிலையில் பயின்று முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார் 98 வயது முதியவரான ராஜ்குமார். அவர் 12வது வருடாந்திர பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, பட்டத்தையும் பெற்றுள்ளார். 

ராஜ்குமார் வைஷ், பொருளாதாரத்தில் எம்.ஏ., பட்டம் பெற்றுள்ளார். இந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் பட்டப்படிப்பை நிறைவு செய்த ராஜ் குமார், நாளந்தா பல்கலையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மேகாலயா ஆளுநர் கங்கா ப்ரசாத்திடம் இருந்து பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். 

ராஜ்குமார் வைஷ், கடந்த 2015ஆம் ஆண்டில் எம்.ஏ., படிப்பில் சேர்ந்துள்ளார். விடாமுயற்சியுடன், படிப்பதற்கு வயது ஒரு தடையில்லை என்று இளைய சமுதாயத்திற்குக் காட்டியுள்ளார். இவரின் மகன் சந்தோஷ் குமார், பாட்னாவில் உள்ள என்ஐடி - தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர். 

முன்னதாக 1938 ஆம் ஆண்டில் ராஜ்குமார் வைஷ் தனது முதல் இளநிலைப் பட்டத்தை ஆக்ரா பல்கலையில் இருந்து பெற்றார். பின்னர் 1940ல் எல்.எல்.பி பட்டம் பெற்றுள்ளார். ஆனால் பின்னர் அவர் முதுநிலைப் பட்டம் எதுவும் பெறவில்லை. அந்த வெறி அவருக்குள் கனன்று கொண்டே இருந்ததாம். இதனால் இந்த 98 வயதில் அவர் எம்.ஏ., பட்டம் முயன்று படித்து பெற்றதாக அவரது மகன் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.