பீகார் முதலமைச்சர் பதவியில் இருந்து நிதிஷ்குமார் ராஜினாமா செய்து, தற்போதைய அரசைக் கலைத்துள்ளார். அவர் 10வது முறையாக மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார். புதிய அமைச்சரவையில் பாஜக மற்றும் பிற கூட்டணிக் கட்சிகள் இடம்பெறும்.
பீகாரில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசின் முதலமைச்சராக இருந்த நிதிஷ்குமார், இன்று (திங்கட்கிழமை) ஆளுநர் ஆரிஃப் முகமது கானிடம் தனது ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்து, நடப்பு அரசாங்கத்தை முறைப்படி முடிவுக்குக் கொண்டு வந்தார்.
இதற்கு முன்னதாக, முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையில் நடைபெற்ற அரசின் கடைசி அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டமன்றத்தைக் கலைக்கப் பரிந்துரைக்க நிதீஷ் குமாருக்கு அதிகாரம் அளிக்கும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
10வது முறையாக முதல்வராகும் நிதிஷ்
தற்போதைய ஆட்சிக்காலம் முடிவடைந்த நிலையில், அடுத்த அரசின் வடிவம் தெளிவாகியுள்ளது. ஐக்கிய ஜனதா தளம் (JD(U)) கட்சித் தலைவர் நிதீஷ் குமார், எதிர்வரும் நவம்பர் 20, வியாழக்கிழமை அன்று 10வது முறையாகப் பீகார் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ளார் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொள்வார் என்றும், குறைந்தது ஒரு துணை முதலமைச்சராவது நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய அமைச்சரவை
புதிய அமைச்சரவையில் இடம்பெறும் இடங்கள் குறித்து கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை இறுதி செய்யப்பட்டுள்ளது. புதிய அரசாங்கத்தில் முக்கியக் கட்சிகளான ஜேடியு மற்றும் பாஜகவுடன், சிறிய கூட்டணிக் கட்சிகளான சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்), உபேந்திர குஷ்வாஹா தலைமையிலான ஆர்.எல்.எம். மற்றும் ஜிதன் ராம் மாஞ்சியின் கட்சியும் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும்.
"புதிய மாநில அமைச்சரவையில் LJP (RV) கட்சிக்கு மூன்று இடங்களும், HAM-S மற்றும் RLM கட்சிகளுக்கு தலா ஒரு இடமும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 16 அமைச்சர்கள் பாஜகவில் இருந்தும், 14 அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சர் JD(U)வில் இருந்தும் வியாழக்கிழமை அன்று பதவியேற்பார்கள்," என்று பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
என்.டி.ஏ. கூட்டணியின் பலம்
சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் வலுவான பெரும்பான்மை பெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) புதிய ஆட்சியைத் தொடங்குகிறது. 243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இந்தக் கூட்டணியில் பாஜக 89 இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. அதைத் தொடர்ந்து நிதிஷ் குமாரின் ஜே.டி.யு. 85 இடங்களைப் வென்றுள்ளது.
